அன்பு மொழியே ஒற்றுமை மொழி; கனிமொழி பதிலுக்கு ஸ்டாலின் பாராட்டு
அன்பு மொழியே ஒற்றுமை மொழி; கனிமொழி பதிலுக்கு ஸ்டாலின் பாராட்டு
அன்பு மொழியே ஒற்றுமை மொழி; கனிமொழி பதிலுக்கு ஸ்டாலின் பாராட்டு
ADDED : ஜூன் 05, 2025 07:07 AM

சென்னை: 'இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை' என, பதிலளித்த பார்லிமென்ட் தி.மு.க., குழுத்தலைவர் கனிமொழிக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குல் நடத்தி 26 அப்பாவி உயிர்களை பறித்தனர்.
இதற்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா. உடனே, இந்திய அரசிடம் மண்டியிட்டது பாக்., அரசு. இதையடுத்து, பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தியது இந்திய அரசு. ஆனாலும், இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து, பாகிஸ்தான் உலகம் முழுதும் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டது.
இதனால், இந்திய அரசு மீது சர்வதேச நாடுகளுக்கு தவறான புரிதல் ஏற்பட்டு விடக்கூடாது என முடிவெடுத்த மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைள் குறித்து, சர்வதேச நாடுகளுக்கு விளக்கம் அளிக்க, மத்திய அரசு சார்பில், பல்வேறு எம்.பி.,க்கள் குழு அமைக்கப்பட்டன.
அக்குழுக்கள், பல நாடுகளுக்கும் சென்று, இந்திய அரசின் செயல்பாடுகளை தெள்ளத்தெளிவாக, அனைவருக்கும் எடுத்துரைத்து திரும்பி உள்ளது. இப்படி, மத்திய அரசு அனுப்பி வைத்த குழுக்களில், கனிமொழி தலைமை வகித்த குழு, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட, 5 நாடுகளுக்கு சென்று, அந்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்தது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், கனிமொழி தலைமையிலான எம்.பி.,க்களை, அந்நாட்டு பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது, 'இந்தியாவின் தேசிய மொழி எது' என, ஸ்பெயின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப, 'வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி' என, கனிமொழி பதில் அளித்தார். இதற்கு, இந்திய அளவிலும் வெளிநாடுகளிலும் கனிமொழிக்குபாராட்டுகள் குவிந்தன.
இந்தியாவின் தேசிய மொழிக்கான கேள்விக்கு, கனிமொழி பதில் அளிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. சமூக வலைதளப் பக்கங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்பெயின் மண்ணில், 'இந்தியாவின் தேசிய மொழி, வேற்றுமையில் ஒற்றுமை' என, உரக்கச் சொல்லி, மக்களின் உணர்வுகளை கைதட்டல்களாகவும், அதிகம் பகிரப்படும் வீடியோவாகவும் மாற்றிய கனிமொழியை வாழ்த்துகிறேன். இந்திய நாட்டுக்கான குரலாக, தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமை மொழியை பேசிய கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.