ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமல்ல; ராகுலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்
ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமல்ல; ராகுலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்
ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமல்ல; ராகுலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்
ADDED : ஜூன் 05, 2025 07:13 AM

அலகாபாத்: 'ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்து பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், எம்.பி.,யுமான ராகுலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2022 டிசம்பரில், 'பாரத் ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில், நாடு முழுதும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, 'அருணாச்சல பிரதேச எல்லையில், நம் ராணுவ வீரர்களை சீன ராணுவத்தினர் அடிக்கின்றனர்' என தெரிவித்திருந்தார். ராகுலின் கருத்தை எதிர்த்து, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பின் இயக்குநர் உதய்சங்கர் ஸ்ரீவத்ஸவா போலீசில் புகாரளித்தார்.
ராகுல் மனு தாக்கல்
இதையடுத்து, ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான லக்னோ சிறப்பு நீதிமன்றம், ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது: மக்கள், பாரத் ஒற்றுமை யாத்திரை பற்றி கேட்பர்; அசோக் கெலாட், சச்சின் பைலட் பற்றி கூட கேட்பர். ஆனால், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறித்தோ, நம் ராணுவத்தினர் தாக்கப்பட்டது குறித்தோ கேள்வி எழுப்ப மாட்டார்கள். பின், ஏன் இந்த பேச்சு.
இந்திய அரசியலமைப்பின் 19 - 1ன் 'ஏ' பிரிவின் கீழ் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டாலும், அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்தவொரு தனி நபரையோ அல்லது நம் ராணுவத்தையோ அவதுாறு செய்யும் உரிமையை, இந்த பிரிவு வழங்காது.
மனதளவில் பாதிப்பு
ராணுவம் அல்லது ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது. ராகுலின் கருத்துகள், நம் ராணுவத்தினரையும், அதை சார்ந்தவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் உள்ளன. ஆகையால், லக்னோ சிறப்பு நீதிமன்ற சம்மனுக்கு எதிரான ராகுலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.