சிறுவன் கோரிக்கை அரசு ஏற்பு: உப்புமாவுக்கு பதில் பிரியாணி!
சிறுவன் கோரிக்கை அரசு ஏற்பு: உப்புமாவுக்கு பதில் பிரியாணி!
சிறுவன் கோரிக்கை அரசு ஏற்பு: உப்புமாவுக்கு பதில் பிரியாணி!
ADDED : ஜூன் 05, 2025 06:26 AM

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த ஷங்கு என்று அழைக்கப்படும் ரிஜுல் எஸ். சுந்தர் என்ற குழந்தை, அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், வறுத்த கோழியும் கொடுக்க வேண்டும் என்று தாயிடம் கூறியது.
இதை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதையடுத்து, அது வேகமாக பரவியது. இந்த, 'வீடியோ' கேரள அரசின் கவனத்திற்கும் சென்றது.
கேரள பெண்கள், குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
தற்போது விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறந்த நிலையில், அங்கன்வாடி மையங்களில் முட்டை பிரியாணி வழங்கப்படும் என, அவர் அறிவித்துள்ளார்.
மாநில அளவிலான அங்கன்வாடிகள் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் வீணா கூறியதாவது:
இதை எப்படி செயல்படுத்த முடியும் என்று நாங்கள் யோசித்தோம். அங்கன்வாடிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டைகள் வழங்கப்பட்டதை தற்போது மூன்று நாட்களாக மாற்றியுள்ளோம்.ர மேலும் புதுப்பிக்கப்பட்ட மெனுவும் நடைமுறைக்கு வர உள்ளது.
குழந்தைகள் என்பதால், இறைச்சி உணவுகள் வழங்குவதில் சிரமங்கள் உள்ளன. எனவே அங்கன்வாடிகளில் முட்டை பயன்படுத்தி, முட்டை பிரியாணி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதிக சர்க்கரை, கொழுப்புகள் இல்லாமல் சத்தான உணவுகளை அங்கன்வாடிகளில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.