அரசு டாக்டர் பணியிட மாற்றத்திற்கு இடைக்கால தடை
அரசு டாக்டர் பணியிட மாற்றத்திற்கு இடைக்கால தடை
அரசு டாக்டர் பணியிட மாற்றத்திற்கு இடைக்கால தடை
ADDED : செப் 23, 2025 06:43 AM

சென்னை; அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளையை பணியிட மாற்றம் செய்த, அரசின் உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு சங்கத் தலைவராக டாக்டர் பெருமாள் பிள்ளை உள்ளார். இவர், சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி, ஜூன் 11 முதல் 19ம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.
இதையடுத்து, நாகை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 'முறையான அனுமதி கடிதம் உயர் அதிகாரிகளிடம் வழங்கியும், அதை கருத்தில் கொள்ளாமல், பணியிட மாற்றம் செய்தது பழிவாக்கும் நடவடிக்கை' என்று தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், 'மனுதாரரை, திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், குழந்தைகள் மருத்துவ துறை இணை பேராசிரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பணியிட மாற்றம் குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, அரசின் பணியிட மாற்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மனுவுக்கு இரு வாரங்களில் அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.