Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டீக்கடை பெஞ்ச்: 'டாஸ்மாக்' கடைகளில் தினக்கூலி பணியாளர்கள்!

டீக்கடை பெஞ்ச்: 'டாஸ்மாக்' கடைகளில் தினக்கூலி பணியாளர்கள்!

டீக்கடை பெஞ்ச்: 'டாஸ்மாக்' கடைகளில் தினக்கூலி பணியாளர்கள்!

டீக்கடை பெஞ்ச்: 'டாஸ்மாக்' கடைகளில் தினக்கூலி பணியாளர்கள்!

ADDED : பிப் 24, 2024 01:03 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

''சத்தம் காட்டாம வந்துட்டு போயிட்டாரு பா...'' என, முதல் ஆளாக பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஆலங்குளம் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான பிஜு நாராயணன் மகள் திருமணம், சமீபத்துல மதுரையில நடந்துச்சு... நாராயணன், தென்காசி மாவட்டமா இருந்தாலும், மாப்பிள்ளை வீட்டார், மதுரைக்காரங்க பா...

''அதனால, திருமணம் மதுரையில நடந்துச்சு... ஆனாலும், உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கு கூட இந்த விபரம் தெரியலை பா...

''சட்டசபை கூட்டத்துல பங்கேற்க, சென்னையில தங்கியிருந்த கட்சியின் பொது செயலர் பழனிசாமி, காலை விமானத்துல மதுரைக்கு வந்து, திருமணத்தை நடத்தி வச்சிருக்காரு... நெல்லை மாவட்ட அ.தி.மு.க.,வுல முக்கிய புள்ளியா இருந்த மனோஜ் பாண்டியன், இப்ப பன்னீர்செல்வம் அணியில இருக்காரு...

''தேர்தல் நேரத்துல, அவருக்கு ஈடுகொடுத்து வேலை பார்க்க, நாராயணன் மாதிரி ஆட்கள் தேவைங்கிறதால தான், பழனிசாமியே மதுரை வந்துட்டு போனாராம் பா...'' என்றார், அன்வர்பாய்.

''வழக்குல இருந்து விடுபடணும்னு வேண்டிண்டு வந்திருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதுாறா பேசிய வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை, 15,000 ரூபாய் அபராதம் விதிச்சு, சென்னை ஐகோர்ட் உத்தரவு போட்டுதோல்லியோ...

''மேல் முறையீடு பண்றதுக்கு ஒரு மாசம் டைம் குடுத்து, தண்டனையை நிறுத்தி வச்சிருக்காங்க... இந்த வழக்குல இருந்து விடுதலையாகணும்னு வேண்டி, புகழ் பெற்ற காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு போய் எஸ்.வி.சேகர் வழிபாடு நடத்திட்டு வந்திருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கூடுதல் வசூலை, 'ஆட்டை' போட வெளியாட்களை வேலைக்கு வச்சிருக்காவ வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சேலம் மாவட்டத்தில், 193 டாஸ்மாக் கடைகள் இருக்கு... இதுல, 20க்கும் மேற்பட்ட கடைகள்ல, தினமும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல விற்பனை நடக்கு வே...

''பாட்டிலுக்கு கூடுதலா விலை வச்சு விற்குறதுல, இந்த கடை ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு தலா, 2,000 ரூபாய் கிடைக்கும்... கடை சூப்பர் வைசர்கள், இந்த தொகையை ஊழியர்களுக்கு சமமா பிரிச்சு குடுக்க விரும்புறது இல்ல வே...

''அதனால, இந்த கடைகளுக்கு அதிக ஊழியர்கள் நியமிக்காம, அதிகாரிகளை சரிக்கட்டிடுதாவ... அதே நேரம், தினக்கூலி அடிப்படையில வெளியாட்களை வேலைக்கு அமர்த்தி, மது விற்பனை செய்தாவ வே...

''இவங்களுக்கு தினமும், 500 ரூபாய் மட்டும் கூலியா குடுக்காவ... இதனால, கூடுதல் வசூலை சூப்பர்வைசர்களே எடுத்துட்டு போயிடுதாவ வே...

''சேலம் சிட்டியில ஆனந்தா இறக்கம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், புறநகர்ல சங்ககிரி, ஆத்துார், வாழப்பாடி, மேட்டூர்ல இருக்கிற டாஸ்மாக் கடைகள்ல, நிறைய வெளியாட்கள் வேலை பார்க்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us