Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கிருஷ்ணா நீருக்கு ஆந்திர அரசு ரூ.153 கோடி கேட்பு கணக்குகளை அலசி ஆராய்கிறது தமிழக நிதித்துறை

கிருஷ்ணா நீருக்கு ஆந்திர அரசு ரூ.153 கோடி கேட்பு கணக்குகளை அலசி ஆராய்கிறது தமிழக நிதித்துறை

கிருஷ்ணா நீருக்கு ஆந்திர அரசு ரூ.153 கோடி கேட்பு கணக்குகளை அலசி ஆராய்கிறது தமிழக நிதித்துறை

கிருஷ்ணா நீருக்கு ஆந்திர அரசு ரூ.153 கோடி கேட்பு கணக்குகளை அலசி ஆராய்கிறது தமிழக நிதித்துறை

ADDED : ஜூன் 12, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
சென்னை: கிருஷ்ணா நீருக்கு, 153 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கும்படி, ஆந்திரா அரசு கேட்டுள்ள நிலையில், அது தொடர்பான கணக்கு விபரங்களை, தமிழக நிதித்துறை அலசி ஆராய்ந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாகவும், கடலுார் மாவட்டம், வீராணம் ஏரி, மீஞ்சூர், நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவும் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சென்னை நகரின் ஒரு மாத குடிநீர் தேவை, ஒரு டி.எம்.சி., ஆகும்.

திருவள்ளூர் மாவட்ட ஏரிகளுக்கு, வடகிழக்கு பருவமழை வாயிலாக நீர் வரத்து கிடைக்கிறது. பருவமழை பொய்த்துபோகும் காலங்களில், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் இடையே, 1976ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாநிலமும், கிருஷ்ணா ஆற்று நீரில், 5 டி.எம்.சி.,யை ஆந்திர மாநிலத்தின் வழியாக, சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்க வேண்டும். ஒப்பந்தப்படி ஆந்திர அரசு, ஒவ்வொரு ஆண்டும் மூன்று டி.எம்.சி., ஆவியாதல் இழப்பு நீங்கலாக, 12 டி.எம்.சி., நீரை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி., ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., தமிழகத்தின் ஜீரோ பாயிண்ட் எல்லைக்கு வந்து சேர வேண்டும். இந்த நீரை கொண்டு வருவதற்காக, கண்டலேறு அணையில் இருந்து, பூண்டி ஏரி வரை, கிருஷ்ணா நீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு முதல், சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி வரை, 114 டி.எம்.சி., நீர், தமிழக எல்லையில் பெறப்பட்டு உள்ளதாக, தமிழக நீர்வளத்துறை கணக்கிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான கால்வாய் பராமரிப்பு செலவை, உபயோகப்படுத்தப்படும் தண்ணீரின் அளவிற்கு ஏற்ப, இரு மாநிலங்களும் பங்கிட்டு கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழக அரசின் பங்கு தொகையாக, 2023 மார்ச் வரை, 1,385 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, ஆந்திர அரசு கூறி வருகிறது. தமிழக அரசு தரப்பில், இதுவரை 1,232 கோடி ரூபாய், ஆந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 153 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என ஆந்திர அரசு கேட்டு வருகிறது.

ஆனால், நிலுவைத்தொகை குறைவாக இருக்கும் என தமிழக அதிகாரிகள் கூறி வருகின்றனர். எனவே, தமிழக அரசு சார்பில், ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய மீதித் தொகையை கணக்கிட, இரு மாநில அரசு அதிகாரிகளும், சில புள்ளி விபரங்களை கேட்டுள்ளனர். பழைய கணக்கு வழக்குகளை, நிதித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us