ஜாதி, மதமற்றவர் சான்றிதழ்; அரசாணை பிறப்பிக்க பரிந்துரை
ஜாதி, மதமற்றவர் சான்றிதழ்; அரசாணை பிறப்பிக்க பரிந்துரை
ஜாதி, மதமற்றவர் சான்றிதழ்; அரசாணை பிறப்பிக்க பரிந்துரை
ADDED : ஜூன் 12, 2025 05:49 AM

சென்னை: திருப்பத்துார் மாவட்டம், தில்லை நகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவர், தனக்கு ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி, 2023ல் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க உத்தரவிடும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க, தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை' என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று, சந்தோஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சந்தோஷ் மேல்முறையீடு செய்தார். தன் குழந்தைகளை ஜாதி, மதம் அற்ற சமூகத்தில் வளர்க்க விரும்புவதாகவும், ஜாதி அல்லது மதம் ஒதுக்கீட்டின் கீழ், அரசிடம் இருந்து எந்த சலுகையையும், ஒருபோதும் கோர போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திருப்பத்துார், கோவை மற்றும் சென்னை அம்பத்துார் தாசில்தார்களால், 'எந்த ஜாதி, மதத்தையும் சேர்ந்தவர் அல்ல' என்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், அரசு தரப்பு வாதங்கள், இவ்வழக்கில் முரண்பாடாக உள்ளன. ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் கோரும் மனுதாரரின் செயல் பாராட்டத்தக்கது.
ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை, அரசியலமைப்பு சட்டம் தடை செய்தாலும், இடஒதுக்கீடு கொள்கைகள் வாயிலாக, சமூக வாழ்க்கை, அரசியல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், ஜாதி, மதம் இன்னும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.
எனவே, ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கிறோம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.