மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம்
மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம்
மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம்

கோவை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் கல்யாண்' திட்டத்திற்கான உறுதியான அர்ப்பணிப்புக்காக, தமிழக மக்கள் மற்றும் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி.
அனைவரையும் உள்ளடக்கிய அதிகாரமளித்தல் மற்றும் திட்டங்களை இலக்கு வைத்து செயல்படுத்துதல் வாயிலாக, 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக தமிழகம், பிரதமரின் ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம், தெரு வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டம், தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் 'முத்ரா' திட்டம், 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாக, மிக உயர்ந்த பலனை கண்டுள்ளது.
இத்திட்டங்கள், லட்சிய மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்கு அடித்தளமிட்டு உள்ளன. பிரதமர் மோடியின் திட்டங்களை, பா.ஜ.,வினர், தமிழகத்தின் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பர்.
'எந்த ஷா வந்தாலும் சரி... அவர் தமிழகத்தில் காலுான்ற முடியாது' என, மதுரையில், கட்சி பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவதை மனதில் வைத்து தான் பேசியுள்ளார். அமித் ஷா, தமிழகத்தில் காலுான்றுவது மட்டுமல்ல; வேரும் ஊன்றுவார் என்பதை ஸ்டாலின் பார்க்கத்தானே போகிறார். தமிழகத்தில் பா.ஜ.,வை ஆலமரமாக வளர்த்துக் காட்டத்தான் போகிறார்.
திருப்பரங்குன்றம் மலையை பற்றி பேசுவதையோ, உரிமை கொண்டாடுவதையோ யாராலும் தடுக்க முடியாது. முருக பக்தர்களின் ஒற்றுமையை காட்ட, அங்கு மாநாடு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரசால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக தொடர் புகார்கள் வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.