Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..

ADDED : மே 29, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது; தண்டனை விபரங்களை, ஜூன் 2ம் தேதி அறிவிக்க உள்ளது.

சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிச., 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரை அடுத்து, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், 37, என்பவரை, கடந்தாண்டு டிச., 25ல் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கை மாற்றி, டிச., 28ல் உத்தரவிட்டது.

கைதான ஞானசேகரனுக்கு எதிராக, திருட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததை அடுத்து, கடந்த ஜன., 5ல், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஞானசேகரனுக்கு எதிராக,

நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட

குற்றப்பத்திரிகை மற்றும் 70க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது.

பின், இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு, கடந்த மார்ச் 7ல் மாற்றப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை காவல் துறை கூறியுள்ளதாகக் கூறி, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு, ஞானசேகரன் தாக்கல் செய்த மனு, கடந்த ஏப்., 8ல் தள்ளுபடி செய்யப்பட்டது. அன்றைய தினமே, ஞானசேகரனுக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

11 பிரிவுகளின் கீழ்


தகவல் தொழில்நுட்ப சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பி.என்.எஸ்., எனும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின், 11 பிரிவுகளின் கீழ், ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், சாட்சி விசாரணை, கடந்த ஏப்., 23ல் துவங்கியது. காவல் துறை தரப்பில், 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் தினசரி விசாரணை நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்கள், கடந்த 23ல் நிறைவு பெற்றதை அடுத்து, மே 28ல் தீர்ப்பு வழங்கப்படும் என, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று காலை 10:30 மணியளவில், பொறுப்பு நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்.

தகவல் தொழில் நுட்ப சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பி.என்.எஸ்., ஆகிய சட்டங்களின், 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், ஞானசேகரன் குற்றவாளி என, நீதிபதி அறிவித்தார்.தனக்கு வயதான தாய் மற்றும் எட்டு வயதில் மகள் உள்ளார் என்றும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் குற்றவாளி ஞானசேகரன் கோரினார்.

அதைக் கேட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, ''ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நுழைந்து, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் குற்றவாளி ஈடுபட்டுள்ளார்.

இதுபோன்ற வழக்குகள் அரிதிலும் அரிதானது. எனவே, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்,'' எனக்கூறி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்களை சமர்ப்பித்தார்.

அப்போது, ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர்கள், 'தொழில் ரீதியாக அதிக கடன் வாங்கி உள்ளார். எனவே, அதிகபட்ச தண்டனை வழங்கினால், கடன்காரர்கள் குடும்பத் தினரை துன்புறுத்துவர்' என்றனர்.

இதைக்கேட்ட நீதிபதி, 'குறைந்த தண்டனை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஏதாவது இருந்தால் தாக்கல் செய்யுங்கள்' எனக் கூறியதுடன், 'இந்த வழக்கில் தண்டனை விபரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும். அதுவரை குற்றவாளியை காவலில் வைக்க வேண்டும்' என, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டுகள் என்னென்ன?


பி.என்.எஸ்., எனும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், அத்துமீறி நுழைதல், சட்ட விரோதமாக தடுத்தல், வலுக்கட்டாயமாக கடத்துதல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், பாலியல் தொல்லை, விருப்பத்துக்கு மாறாக ஆபாச புகைப்படங்களை காண்பித்தல், தாக்குதல்-, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுத்தல், ஆதாரங்களை அழித்தல், தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், ஞானசேகரன் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கடும் தண்டனை?

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், தி.மு.க., நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாக கையாளப்பட வேண்டும். இதுபோன்ற குற்றங்கள்

மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையாக தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

- அண்ணாமலை,

முன்னாள் தலைவர்,

தமிழக பா.ஜ.,

மீண்டும் கேட்கிறோம்

யார் அந்த சார்..?

ஞானசேகரனை குற்றவாளி என, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஞானசேகரனுக்கு பின்னால் இருந்த, சார் யார் என்பதே தெரியாமல் இருப்பதும், அவர் சட்டத்தின் கண்களை மறைத்து இருப்பதும் அவமானகரமானது.

அந்த சாரை தப்ப விட்டு, ஞானசேகரனுக்கு மட்டும் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கும் தி.மு.க., அரசின் சாதனை இருக்கிறதே, அது யாரும் செய்யாத சாதனை. தமிழகப் பெண்

களின் மாண்பையும் மரியாதையையும் கேலிக்குரியதாக்கும் அந்த கேள்விக்கு, இன்னும் விடை அளிக்கப்படாமலேயே, உண்மை மறைக்கப்பட்டு

விட்டது. இப்பவும் கேட்கிறோம்... 'யார் அந்த சார்?'

- அஸ்வத்தாமன்,

செயலர், தமிழக பா.ஜ.,

பாராட்டு


ஐந்தே மாதத்தில் வழங்கப்பட்டுள்ள, இந்த தீர்ப்பு, நீதித்துறை மீதான நம்பிக்கையை, பெண்கள் இடையே அதிகரித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், வெகுவாக குறையும் என்ற எண்ணமும் உருவாகி உள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை, சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை, பொது மக்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட, அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகள்.

- பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us