Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

UPDATED : மே 29, 2025 01:15 PMADDED : மே 29, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
மதுரை : 'லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தாமதப்படுத்தும் வகையில் அதிகாரிகள் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றனர்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

கரூர் மின் வாரியத்தில் பணியாற்றியவர் சரவணன். இவர் உட்பட மூன்று பேர், சக தொழிலாளர் ஒருவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, 2011ல் கைதாகினர். சரவணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க அவருக்கு 'மெமோ' அனுப்பப்பட்டது.

அவர், '10 ஆண்டுகள் கழித்து 2021ல் மெமோ அனுப்பி உள்ளனர். இது சட்டவிரோதம். எனக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மின்வாரியம் தரப்பில், 'மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் உரிய ஆவணங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்ற வழக்கில் சிக்கும் மின் வாரிய ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில், ஒரே மாதிரியான கொள்கை தான் கடைப்பிடிக்கப்படுகிறது.

'மின்வாரியத்தில் 225 ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில், 56 பேருக்கு மட்டும் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேவையான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கோரப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


'குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை' என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், லஞ்ச வழக்குகளில் சிக்கியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர். இதை நீதிமன்றம் கவனித்து வருகிறது.

சில அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை தாமதப்படுத்தி, லஞ்ச வழக்கில் சிக்குபவர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றனர். இதை, அரசு கவனிக்க வேண்டும். தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், அந்தந்த துறை ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொடரலாம். இதிலும் தாமதம் ஏற்பட காரணமான அதிகாரி குறித்து, துறை தலைவரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.

மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, 2018ல் ஒப்புதல் கோரப்பட்டது; 2019ல் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதை தாமதமாக கருத முடியாது. தாமதமாக கருதினாலும் லஞ்ச புகார் தீவிரமானது என்பதால், மனுதாரருக்கு அனுப்பிய மெமோவை ரத்து செய்ய முடியாது. மனுதாரர் உரிய விசாரணையை சந்திக்க வேண்டும். இவ்வழக்கை கரூர் நீதிமன்றம் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us