முதல்வரை குஷிப்படுத்த செல்வப்பெருந்தகை ஜால்ரா
முதல்வரை குஷிப்படுத்த செல்வப்பெருந்தகை ஜால்ரா
முதல்வரை குஷிப்படுத்த செல்வப்பெருந்தகை ஜால்ரா
ADDED : ஜூன் 19, 2024 04:03 AM

சென்னை : ''ஜாதி மறுப்பு திருமண கொலைகள் நடக்கவில்லை; சட்டம் - ஒழுங்கு சீர்குலையவில்லை. சொந்த காரணத்திற்காக வீட்டுக்குள் நடக்கும் கொலைகளை எப்படி தடுக்க முடியும்,'' என, கேட்கிறார் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை.
சமீபத்தில், சென்னையில் நடந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, 'காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. நாம் எவ்வளவு காலம் சார்ந்து இருப்பது; சுயமாக நிற்க வேண்டும்' என, மறைமுகமாக தி.மு.க., கூட்டணியை விமர்சித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய அவரது ஆதரவாளர்கள், 'உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் காங்., தனித்துப் போட்டியிட வேண்டும்' என, வலியுறுத்தியதால், தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சை பேச்சை கண்டித்த, காங்கிரஸ் மேலிடம், தி.மு.க., கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என எச்சரித்தது.
அதையடுத்து, கோவையில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் பேசிய செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அடையும் வகையில், தி.மு.க., அரசை வெகுவாக புகழ்ந்து தள்ளினார்.
இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கக்கன் பிறந்த நாள் விழா நடந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி குணசேகரன், அந்த விழாவில் காங்கிரசில் இணைந்தார்.
பின், செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சொந்த பிரச்னைகளான சொத்து தகராறு, காதல் விவகாரத்தில் நடக்கும் கொலைகளை, எப்படி சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு என, சொல்ல முடியும்? இதை காவல் துறையும், முதல்வர் ஸ்டாலினும் எப்படி தடுக்க முடியும்?
ஜாதி மறுப்பு திருமண கொலைகள் எதுவும் நடக்கவில்லை. இரு வன்முறை கும்பல்கள் மோதிக்கொள்வதை தான் தடுக்க வேண்டும். வீட்டுக்குள் நடக்கும் கொலைகளை எப்படி தடுக்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.