'அரசு கேபிள், 'டிவி'யை முடக்க தி.மு.க., அரசு முயற்சிக்கிறது'
'அரசு கேபிள், 'டிவி'யை முடக்க தி.மு.க., அரசு முயற்சிக்கிறது'
'அரசு கேபிள், 'டிவி'யை முடக்க தி.மு.க., அரசு முயற்சிக்கிறது'
ADDED : ஜூன் 19, 2024 04:06 AM

சென்னை : ‛தி.மு.க., அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, அரசு கேபிள், 'டிவி'யை முடக்க முயற்சிக்கிறது' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2007ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியால், ஒரு சில குடும்ப காரணங்களுக்காக, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், முறையான திட்டமிடுதல் இல்லாததால், எவ்வித செயல்பாடுமின்றி கிடப்பில் இருந்தது.
அடுத்து, 2011ல் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், அந்நிறுவனம் புதுப்பிக்கப்பட்டது. மிகக் குறைந்த கட்டணத்தில், மக்கள் பயன்பெறும் வகையில், 24,000 கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் வழியே, 40 லட்சம் இணைப்புகளுடன் செயல்பட்டது.
மத்திய அரசின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம், டிஜிட்டல் லைசென்ஸ் பெறப்பட்டது. மாநிலம் முழுதும், 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வினியோகிக்கப்பட்டன.
தற்போதைய தி.மு.க., ஆட்சியில், முறையான பராமரிப்பின்மை, சேவை குறைபாடு, செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு போன்றவை காரணமாக, அ.தி.மு.க., ஆட்சியில், 30 லட்சமாக இருந்த இணைப்புகள், தற்போது, 10 லட்சமாக குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது.
இந்நிலையில், மென்பொருள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய, ஏ.எம்.சி., தொகையை முறையாக செலுத்தாததால், அந்நிறுவனத்தால் கடந்த, 15ம் தேதி முதல், தமிழகம் முழுதும் அரசு கேபிள், 'டிவி' ஒளிபரப்பில் தடங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் குறைந்த கட்டணத்தில், ஏழை, நடுத்தர மக்கள், 'டிவி' நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தொழிலை நம்பியுள்ள, 15,000க்கும் மேற்பட்ட கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களும், வாடிக்கையாளர்களும், கேபிள், 'டிவி' தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகி உள்ளது.
தி.மு.க., அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, அரசு கேபிள், 'டிவி'யை முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.