புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்
புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்
புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்
ADDED : ஜூன் 19, 2024 04:08 AM

சென்னை: 'இந்திய அரசியலமைப்பின் 348வது பிரிவை மீறும் வகையில், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு உருவாக்கி உள்ள மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
தற்போதுள்ள இந்திய தண்டனை சட்டம், 1860; குற்றவியல் நடைமுறை சட்டம், 1973 ஆகியவற்றை ரத்து செய்து, மத்திய அரசு இயற்றிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில், மாநிலம் எதிர்கொள்ளும் சில ஆட்சேபனைகள் மற்றும் சிக்கல்களை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மேலும், இந்திய ஆதாரச் சட்டம், 1872, ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.
அவகாசம் வழங்கவில்லை
இந்த சட்டங்கள், இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பட்டியல் மூன்றுக்குள் அடங்கும். எனவே, மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.
மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, போதிய அவகாசம் வழங்கவில்லை.
இதனால் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல், புதிய சட்டங்கள் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டன.
அவற்றுக்கு, பாரதிய நியாயா சன்ஹிதா, 2023; பாரதிய நாக்ரிக் சுரஷா சன்ஹிதா, 2023; பாரதிய சாக் ஷ்யா ஆதினியம், 2023 என, சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன.
இது இந்திய அரசியலமைப்பின் 348வது பிரிவை தெளிவாக மீறுகிறது. பார்லிமென்டால் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும், ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். கூடுதலாக இந்த சட்டங்களில், சில அடிப்படை பிழைகள் உள்ளன.
மறு பரிசீலனை
இந்த புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த, கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல், சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை திருத்துவதற்கு போதுமான நேரம் தேவைப்படும்.
நீதித்துறை, காவல் துறை, சிறைத்துறை, வழக்கு விசாரணை, தடயவியல் போன்றவற்றுக்கு போதுமான ஆதாரங்களும், நேரமும் தேவை.
தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசித்து, புதிய விதிகளை உருவாக்குவதும், தற்போதுள்ள படிவங்கள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை திருத்துவதும் கட்டாயமாகும்.
எனவே, அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் கருத்துகளை கவனத்தில் வைத்து, புதிய சட்டங்களை மறு பரிசீலனை செய்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, அந்த மூன்று சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.