வங்கியில் ரூ.8 கோடி பணம், 50 கிலோ தங்கம் கொள்ளை
வங்கியில் ரூ.8 கோடி பணம், 50 கிலோ தங்கம் கொள்ளை
வங்கியில் ரூ.8 கோடி பணம், 50 கிலோ தங்கம் கொள்ளை
ADDED : செப் 17, 2025 04:51 AM

விஜயபுரா : கர்நாடகாவில், எஸ்.பி.ஐ., வங்கி ஒன்றில் புகுந்த முகமூடி கும்பல், ஊழியர்களை கட்டிப்போட்டு, 8 கோடி ரொக்கம், 50 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம், சடசனா தாலுகாவில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இந்த பகுதி, மஹாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ளது. நேற்றிரவு 7:00 மணியளவில் வங்கி ஊழியர்கள், பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாராகினர்.
அப்போது, முகமூடி அணிந்த மர்ம கும்பல், திடீரென முன் வாசல் வழியாக வங்கிக்குள் நுழைந்தது. அவர்கள் அடர்ந்த பச்சை நிறத்தில், ராணுவத்தினர் அணிவது போன்ற நிறத்தில் உடை அணிந்திருந்தனர். நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். அவற்றை காட்டி, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை, 'சத்தம் போடக்கூடாது' என மிரட்டினர்.
அனைவரின் கை, கால்களை கட்டிப்போட்டனர். அதன்பின் லாக்கரில் இருந்த பணம், தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு, வாகனங்களில் தப்பினர். இதுகுறித்து, தகவலறிந்து போலீசார், சம்பவம் நடந்த வங்கிக்கு வந்து பார்வையிட்டனர். அதிகாரிகள், ஊழியர்களிடம் மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், 8 கோடி ரூபாய் ரொக்கம், 50 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. கொள்ளை நடந்த வங்கி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் மஹாராஷ்டிராவை நோக்கிச் சென்றது தெரிய வந்துள்ளது. அவர்கள் அம்மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.