பா.ஜ., நாகேந்திரன் மகன் பெயரில் கல் குவாரி; பொதுமக்கள் எதிர்ப்பு
பா.ஜ., நாகேந்திரன் மகன் பெயரில் கல் குவாரி; பொதுமக்கள் எதிர்ப்பு
பா.ஜ., நாகேந்திரன் மகன் பெயரில் கல் குவாரி; பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 17, 2025 04:28 AM

துாத்துக்குடி : தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் மகன் துவங்க உள்ள கல் குவாரிக்கு, கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கருத்து கேட்பு கூட்டத்தில் காரசார வாக்குவாதம் நடந்தது.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்து பகுதியில், புதிதாக கல் குவாரி அமைப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று பேட்மாநகரம் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் பிரபு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், புதிதாக அமைய உள்ள கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் பேசினர். கல் குவாரி வேண்டும் என ஆதரவாக சிலரும் பேசியதால், இரு தரப்பினர் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி பெயரில் கல்குவாரி துவங்க, தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அவரும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அவருக்கு ஆதரவாக பேசிய சிலர் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதால் குவாரி அமைக்க உடனே அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும்போது, ''ஸ்ரீ மூலக்கரை பகுதியில் வண்டிப்பாதை உள்ளது. சிவகளை தொல்லியல் களம் அருகே இருப்பதால், புதிய குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது,'' என எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேச முயற்சித்த போது, அவரை சிலர் பேச விடாமல் தடுத்தனர்.
வீரன் சுந்தரலிங்கநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்து செல்வன் பேசும் போது, ''கல் குவாரிக்கு விண்ணப்பிக்கும் போது, நயினார் பாலாஜி 45 வகையான ஆவணங்களை மறைத்துள்ளார். தற்போது இயங்கி வரும் கல் குவாரிகளால் பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றன. அதனால், புதிதாக குவாரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது,'' என கேட்டுக் கொண்டார்.
'அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அவர்களது வாரிசுகளுக்கு சுரங்க திட்ட அனுமதி வழங்க கூடாது என முதல்வர் கூறி இருப்பதால், எம்.எல்.ஏ.,வாக இருக்கும் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி துவங்க உள்ள குவாரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது' என சமூக ஆர்வலர்கள் பலர் பேசினர்.
'கல் குவாரிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பேசிய கருத்துகள் அனைத்தும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்; அவர்கள் அனுமதி அளிப்பது குறித்து இறுதி முடிவெடுப்பர்' என வருவாய் கோட்டாட்சியர் பிரபு தெரிவித்தார்.