தயாரிப்பாளர்கள் - 'பெப்சி' பிரச்னைக்கு மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்
தயாரிப்பாளர்கள் - 'பெப்சி' பிரச்னைக்கு மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்
தயாரிப்பாளர்கள் - 'பெப்சி' பிரச்னைக்கு மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்
ADDED : ஜூலை 03, 2025 12:52 AM
சென்னை:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்- - 'பெப்சி' இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை துவங்கி உள்ளதாக, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான, பெப்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அந்த சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில், பெப்சி அமைப்பினர் பணிபுரியக் கூடாது என, தன்னுடைய உறுப்பினர்களுக்கு, ஏப்ரல் 2ல், பெப்சி கடிதம் அனுப்பியது.
இதனால், படப்பிடிப்பு, படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு, நீதிபதி கே.குமரேஷ் பாபு முன், கடந்த ஜூன் 30ல் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு சங்கங்கள் இடையேயான பிரச்னையை பேசி தீர்ப்பதற்கு மத்தியஸ்தராக யாரை நியமிக்கலாம் என, இரு தரப்பும் கலந்து ஆலோசித்து தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என, இரு தரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அவரை மத்தியஸ்தராக நியமித்து, நீதிபதி கே.குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.