Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மூட்டுவாத பாதிப்புக்கு 'அரோமா தெரபி' இயற்கை மருத்துவ ஆய்வில் கண்டுபிடிப்பு

மூட்டுவாத பாதிப்புக்கு 'அரோமா தெரபி' இயற்கை மருத்துவ ஆய்வில் கண்டுபிடிப்பு

மூட்டுவாத பாதிப்புக்கு 'அரோமா தெரபி' இயற்கை மருத்துவ ஆய்வில் கண்டுபிடிப்பு

மூட்டுவாத பாதிப்புக்கு 'அரோமா தெரபி' இயற்கை மருத்துவ ஆய்வில் கண்டுபிடிப்பு

ADDED : ஜூலை 03, 2025 12:53 AM


Google News
சென்னை:மூட்டுவாத பாதிப்புகளுக்கு, 'அரோமா தெரபி' எனப்படும் நறுமண சிகிச்சையில் நல்ல தீர்வு கிடைப்பது, யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை, அரும்பாக்கம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் எஸ்.மாதேஷ், ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின்படி, ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

பிரச்னை


அதில் கூறியிருப்பதாவது:

'ஆஸ்டியோ ஆர்தரைடிஸ்' எனப்படும் மூட்டுவாத பாதிப்பு பரவலாக இருக்கக் கூடியது. உலகம் முழுதும், 25 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

குருத்தெலும்பு, மூட்டு இணைப்பு எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட தேய்மானம் மற்றும் உராய்வுகளால், இப்பிரச்னை ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் நடக்க முடியாமலும், இயல்பாக செயல்பட முடியாமலும் முடக்கி விடக்கூடிய நோயாக உள்ளது.

பொதுவாக தலை வலி, உடல் வலி, சோர்வு, பதற்றம், துாக்க குறைபாடுகளுக்கு நறுமண சிகிச்சைகள் நல்ல பலன் அளிக்கின்றன. பூக்கள், தாவரங்கள், மூலிகைகள், வேர்கள், இலைகளின் சாரத்தை தனியாக பிரித்தெடுத்து, நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன.

'லெமன் கிராஸ்' எனப்படும் எலுமிச்சை புல்லும், 'கெமோமில்' எனப்படும் சாமந்தி வகை பூக்களும் இயற்கையாகவே அதீத மருத்துவ குணம் கொண்டவை. அவற்றின் சாரத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து, தனித்துவமான நறுமண எண்ணெய் தயாரித்து, அதை மூட்டு அழற்சி நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்தோம்.

அதன்படி, யோகா, இயற்கை மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளில், 80 பேருக்கு சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டது. அவர்களில், 50 பேர் சிகிச்சைக்கு தகுதியானவர்களாக இருந்தனர். 40 முதல் 60 வயது வரையிலான, 38 பெண்களும், 12 ஆண்களும் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவசியம்


அவர்களுக்கு எலுமிச்சை புல் மற்றும் சாமந்தி பூ எண்ணெய் தலா, 3 மி.லி., யுடன் தேங்காய் எண்ணெய், 15 மி.லி., சேர்த்து, ஒவ்வொரு கால் மூட்டிலும் தலா, 10 நிமிடம் வீதம், 10 நாட்களுக்கு நறுமண எண்ணெய் மசாஜ் செய்யப்பட்டது.

அதன் பயனாக, அவர்களது உடல் எடை குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக மூட்டு அழற்சியால் ஏற்பட்ட வலியும் குறைந்தது தெரியவந்தது. இதை நுட்பமாக அறிந்துகொள்ள கூடுதல் நோயாளிகளைக் கொண்டு விரிவான ஆய்வு மேற்கொள்வது அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us