சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் தவிர்க்க அனுமதி அட்டை முறையை அமல்படுத்த திட்டம்
சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் தவிர்க்க அனுமதி அட்டை முறையை அமல்படுத்த திட்டம்
சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் தவிர்க்க அனுமதி அட்டை முறையை அமல்படுத்த திட்டம்
ADDED : மார் 21, 2025 12:27 AM

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது, 'டோக்கன்' பெற்றவர்கள் மட்டும் உள்ளே செல்லும் வகையில், அனுமதி அட்டை பயன்படுத்துவதை கட்டாயமாக்க, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
'ஆன்லைன்'
தமிழகத்தில், 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன. இதில், பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் குறித்த விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
அடிப்படை விபரங்கள் சரியாக இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்வதற்கான நேரம் ஒதுக்கப்படும். இதற்கான டோக்கன்கள், 'ஆன்லைன்' முறையில் வழங்கப்படுகின்றன.
இதன்படி, டோக்கன் பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், சார் - பதிவாளர் அலுவலகத்துக்குள் சென்றால் போதும். சமீபநாட்களாக, டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது, வேறு நபர்களும் உள்ளே செல்வதாக புகார்கள் வந்துள்ளன.
சமீபத்தில் சில இடங்களில், சார் - பதிவாளர்களை அலுவலகத்திற்குள் புகுந்து வெளியாட்கள் தாக்கியதாகவும் புகார்கள் எழுந்தன. அதனால், பணியிடத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று, சார் - பதிவாளர்கள் முறையிட்டனர்.
இந்நிலையில், பத்திரப்பதிவின் போது, சம்பந்தம் இல்லாத நபர்கள் அலுவலகத்துக்குள் வருவதை முழுமையாக தடை செய்ய, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன.
டோக்கன்
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்திரப்பதிவின் போது சம்பந்தம் இல்லாத நபர்களை, அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என, ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறோம். இருப்பினும், வெளியார் நுழைவு தொடர்கிறது.
இந்நிலையில், சென்னை அடையாறு சார் பதிவாளர் அலுவலகம், மாதிரி அலுவலகமாக சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில், சொத்து வாங்குவோர் உள்ளே செல்ல, 'அனுமதி அட்டை' வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, சொத்து வாங்குவோர் தங்களுக்கான டோக்கன் விபரங்களை, அலுவலகத்தின் முகப்பில் உள்ள பணியாளரிடம் காட்டினால், அவர் ஒரு கார்டு கொடுப்பார். அதை காட்டினால் மட்டுமே, சார் - பதிவாளர் இருக்கும் இடத்துக்கு செல்வதற்கான கதவு திறக்கும்.
மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இதைஅடுத்து, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் இதை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில், இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.