'ஏய் வெளியே போ...' என ஒருமையில் பேசி மாற்றுத்திறனாளிகளை விரட்டிய பெண் அதிகாரி
'ஏய் வெளியே போ...' என ஒருமையில் பேசி மாற்றுத்திறனாளிகளை விரட்டிய பெண் அதிகாரி
'ஏய் வெளியே போ...' என ஒருமையில் பேசி மாற்றுத்திறனாளிகளை விரட்டிய பெண் அதிகாரி
ADDED : மார் 21, 2025 12:36 AM

சென்னை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை, அத்துறை இயக்குநர் லட்சுமி, ஒருமையில் பேசி வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
'திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய பார்வையற்றோர் இணையம் தமிழ்நாடு கூட்டமைப்பு சார்பில், கடந்த நான்கு நாட்களாக, சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தலைமை அலுவலகத்தின் முன், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் பொருளாளர் கற்பகவள்ளி கூறியதாவது:
பார்வையற்ற மாணவி ராஜேஸ்வரி மர்ம மரணத்திற்கு நீதி வழங்குவது, அரசு வேலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நான்கு நாட்களாக போராடி வருகிறோம். இதுவரை, அரசு தரப்பில் எங்களை அழைத்து எந்த பேச்சும் நடத்தப்படாமல் இருப்பது, எங்களுக்கு வேதனையாக உள்ளது.
மாறாக, மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குநர், போலீசாரை வைத்து எங்களை அடக்க நினைக்கிறார். அது மட்டுமின்றி, எங்களில் சிலரை, 'ஏய் வேலையில்லை வெளியே போ...' என்று, நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசி வெளியேற்றினார்.
மேலும், போராட்டத்தை திசை திருப்பும் வகையில், நீதிமன்றம், காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வதாக பொய்யான காரணங்களைக் கூறி, இரவு நேரங்களில் எங்களை கிளாம்பாக்கம், ஆவடிக்கு அழைத்துச் செல்லும் போலீசார், அங்கேயே விட்டு விடுகின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் வழி தெரியாமல் நாங்கள் அவதிக்குள்ளாகி உள்ளோம். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, அறவழியில் போராடி வரும் எங்களை இப்படி செய்வது, சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டது.
எனவே, முதல்வர் ஸ்டாலின் எங்களது பிரச்னையில் தலையிட்டு, இயக்குநரை மாற்றுவதோடு, எங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அடுத்தகட்டமாக, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.