வக்கீல்கள் மீதான தாக்குதல் புகார் ஆணையம் அமைத்த உத்தரவு நிறுத்தம்
வக்கீல்கள் மீதான தாக்குதல் புகார் ஆணையம் அமைத்த உத்தரவு நிறுத்தம்
வக்கீல்கள் மீதான தாக்குதல் புகார் ஆணையம் அமைத்த உத்தரவு நிறுத்தம்
ADDED : செப் 10, 2025 01:55 AM

சென்னை:வழக்கறிஞர்களை போலீசார் தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த, ஒரு நபர் ஆணையம் அமைத்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
'சென்னையில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளனர்; அவர்களை உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும்' என, வழக்கறிஞர் விஜய் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, துாய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்ட ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்களை, போலீசார் கடுமையாக தாக்கியதுடன், அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை, போலீசார் தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் நியமித்து, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.
ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, சவுந்தர் அடங்கிய அமர்வு, ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும், பிரதான வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.