கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் அதிகரிப்பு
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் அதிகரிப்பு
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் அதிகரிப்பு
ADDED : செப் 10, 2025 01:53 AM

சென்னை:கூட்டுறவு வங்கிகளில், நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை, 25 லட்சம் பேருக்கு, 25,000 கோடி ரூபாய்க்கு நகைக்கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில், கிராம் தங்கத்துக்கு, 6,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. எனவே, பலரும் நகைக்கடன் வாங்கி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை, 25 லட்சம் பேருக்கு, 25,000 கோடி ரூபாய்க்கு நகைக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில், 21.50 லட்சம் பேருக்கு, 20,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த, 2024 - 25ம் நிதியாண்டில், 70.28 லட்சம் பேருக்கு, 62,001 கோடி ரூபாய்க்கு, நகைக் கடன்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தனியார் வங்கிகள், அடகு நிறுவனங்களுக்கு இணையாக, கூட்டுறவு வங்கிகளிலும், தங்க நகை அடமானத்திற்கு, அதிக தொகை கடன் வழங்கப்படுகிறது.
'குறைந்த வட்டி வசூலிக்கப்படுவதால், ஏற்கனவே வாங்கியவர்களுடன், புதிய வாடிக்கையாளர்களும், அதிக அளவில் நகைக்கடன் வாங்குகின்றனர்' என்றார்.