ADDED : ஜன 28, 2024 01:58 AM

மதுரை: ''பிறந்த குழந்தையான தெலுங்கானாவை, மகப்பேறு மருத்துவரான எனக்கு கையாள தெரியும்,'' என, மதுரையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசினார்.
மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் துவங்கிய நாடார் மகாஜன சங்க 72வது மாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்திய வரலாற்றில் குடியரசு தினத்தில் தெலுங்கானா, புதுச்சேரி என, இரு மாநிலங்களில் தேசியக்கொடி ஏற்றிய ஒரே கவர்னர் என்ற பெருமை எனக்கு உண்டு.
கொள்கை மாறுபாடு, எதிரியாக இருந்தாலும் அழைப்பு வந்தால் மரியாதை தந்து ஏற்பது தமிழர் குணம். அதையும், பொது வாழ்வில் பலத்தையும் கற்றுக் கொடுத்தவர் காமராஜர். தமிழகத்தில் தொழிற்பேட்டை, உயர்கல்வி நிறுவனம், அணைகள் என பல சாதனைகளை செய்தவர். கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்த பிரதமர் மோடி, 'காமராஜர் தற்போது இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்' என்றார். மாற்றுக் கொள்கை உடையவர்களை ஈர்க்கும் தலைவர் காமராஜர்.
'தெலுங்கானா தற்போது பிறந்த குழந்தை. அனுபவம் இல்லாத இவர் எப்படி அம்மாநிலத்தை நிர்வகிக்க போகிறார்' என, எனக்கு எதிராக விமர்சனம் எழுந்தது. மகப்பேறு டாக்டரான எனக்கு பிறந்த குழந்தையை எப்படி கையாள்வது என்பது தெரியும். கற்ற கல்வி துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.