தமிழகத்தை தலைகுனிய வைத்தது கருணாநிதி குடும்பம்: பழனிசாமி
தமிழகத்தை தலைகுனிய வைத்தது கருணாநிதி குடும்பம்: பழனிசாமி
தமிழகத்தை தலைகுனிய வைத்தது கருணாநிதி குடும்பம்: பழனிசாமி
ADDED : செப் 21, 2025 03:38 AM

நாமக்கல் : ''ஜெர்மனி சென்று போட்ட ஒப்பந்தம் வாயிலாக, 32 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாக, முதல்வர் ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகம் முழுதும் தொகுதிவாரியாக பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு, நாமக்கல் மாவட்டம் சென்றார். ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதிகளில், பிரசாரம் செய்த பழனிசாமி, அங்கு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி சென்று 922 ஒப்பந்தங்கள் போட்டதாகவும், 10 லட்சத்து, 50,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்த்து, 77 ஒப்பந்தங்கள் வாயிலாக, 32 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாகவும் சொன்னார். ஆனால், சேந்தமங்கலம் மக்களே! இங்கு யாருக்காவது வேலை கிடைத்ததா? முதல்வர் ஸ்டாலின், பச்சை பொய் சொல்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்தார். 100 நாள் வேலைத்திட்டத்தை, 150 நாளாக உயர்த்தி, சம்பளமும் அதிகரிக்கப்படும்;
சமையல் காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு; ரேஷனில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை என அறிவித்தார். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. அத்தனையும் பொய்.
'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்' என்கிறார், ஸ்டாலின். ஏற்கனவே '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வாயிலாக, கருணாநிதி குடும்பத்தினர், இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டனர். ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க.,; எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது.
சீர்காழி அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஏழை கர்ப்பிணி பெண்கள் 27 பேருக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டு சிக்கலாகி உள்ளது. சுகாதார துறையை கவனிக்கும், 'மாரத்தான்' அமைச்சர் ஓடிக்கொண்டே இருக்கிறாரே தவிர, அரசு மருத்துவமனைகளை கவனிப்பது இல்லை.
மகளிருக்கு இலவசமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பிங்க்' கலர் பஸ்சில் வந்து என்னை முந்தப்போவதாக துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார்.
அவர் சொல்லும் 'பிங்க்' கலர் அரசு பஸ் எப்படி இருக்கிறது? மழை பெய்தால் ஒழுகுகிறது; மேற்கூரை காற்றில் பறக்கிறது; டயர் கழன்று ஓடுகிறது. பஸ்சில் ஏறினால், யார் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. அப்படிப்பட்ட பஸ்சில் வந்து நம்மை முந்துவாராம்.
தமிழகத்தில், கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. ஆம்லெட்டில் கூட, கஞ்சா கலக்கி போடுகின்றனர். போதைப்பொருட்களை விற்பதே, தி.மு.க.,காரர்கள் தான். அப்புறம் எப்படி இதை கட்டுப்படுத்த முடியும்? இவ்வாறு அவர் பேசினார்.