மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூன் 12, 2025 02:08 PM

சேலம்: ''10 ஆண்டுகளாக கட்டுவதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?'' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500க்கு கொள்முதல் செய்யப்படும். சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,548 வழங்கப்படும்; இதன் வாயிலாக 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். தி.மு.க., அரசின் செல்வாக்கை பார்த்து வயிறு எரிகிறார்கள்.
சில நாட்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். அவர் அரசியல் மட்டும் பேசியிருந்தால், நான் இங்கு பதில் பேசி இருக்க மாட்டேன். ஆட்சியை குறை சொல்லி இருக்கிறார். வெறும் அறிவிப்புகள் மட்டும் வெளியிடுவதாக விமர்சனம் செய்து விட்டு சென்று இருக்கிறார். மத்திய அரசு திட்டத்திற்கு மாநில அரசுதான் நிதி தருகிறது.
பிரதமர் மோடி பெயரில் செயல்படும் திட்டத்திற்கு 50 சதவீத நிதியை மாநில அரசு தான் கொடுத்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு தான் தமிழகத்திற்கான எந்த சிறப்பு திட்டத்தையும் தராத அரசு. திட்டத்திற்கு ஒதுக்கும் பணம் ஒழுங்காக வந்து சேருவதில்லை. மதுரை வந்த அமித்ஷாவிடம் கேட்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன் உங்கள் அரசு அறித்த எய்ம்ஸ் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தீர்களா?
நாங்கள் ஆட்சிக்கு வந்து அதே 4 ஆண்டுகளில் மதுரையில் நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் என ஏராளமான பணிகளை முடித்து இருக்கிறோம். இது தான் பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கு இடையே உள்ள வித்தியாசம். 10 ஆண்டுகளாக கட்டுவதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?
தொடர்ந்து 10 ஆண்டுகளாக கட்டி கொண்டு இருக்கிறதுக்கு, ஒழுங்காக நிதி ஒதுக்கி இருந்தால் 2 ஆண்டுகளில் கட்டி முடித்து இருக்கலாம். 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த ஒரு திட்டங்களை சொல்லுங்கள், அதை மட்டும் சொல்ல மறுக்கின்றனர். 2004ம் ஆண்டு காலக்கட்டத்தையும் 2025ம் ஆண்டு காலக்கட்டத்தையும் ஒப்பீட்டு பேசி இருக்கிறீர்கள்.
அன்றைக்கு ஒரு பவுன் தங்கம் ஐந்தாயிரம் ரூபாய். இன்றைக்கு ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71 ஆயிரம். தமிழகத்தை புறக்கணிப்பதால், அவர்களின் கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணித்து கொண்டே இருப்பார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள். டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தி.மு.க., அரசுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். 2026ம் ஆண்டிலும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
6 புதிய அறிவிப்புகள்!
சேலம் மாவட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 6 புதிய அறிவிப்புகள்:
* சேலத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சாலையில் சீரமைப்பு, சாக்கடை பாலம் மேற்கொள்ளப்படும்.
* சேலம் செவ்வாய்பேட்டை சந்தை 9 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.
* தலைவாசல் வட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலுப்பநத்தம் கிராமத்தில் 10 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்படும்.
* மேட்டூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும்.
* சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.
* எடப்பாடி நகராட்சியில் 9 கோடி மதிப்பிலும், ஆத்தூரில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.