Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'தமிழ் வாழ்க' என்று எழுதுவதை தவிர, தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்; தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

'தமிழ் வாழ்க' என்று எழுதுவதை தவிர, தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்; தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

'தமிழ் வாழ்க' என்று எழுதுவதை தவிர, தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்; தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

'தமிழ் வாழ்க' என்று எழுதுவதை தவிர, தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்; தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

ADDED : ஜூன் 12, 2025 01:58 PM


Google News
Latest Tamil News
சென்னை: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி நடத்தவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுதான் திராவிட மாடல் தி.மு.க., அரசு தமிழை வளர்க்கும் முறையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை; நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ் பேரவை இணைந்து திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி வரும் 14ம் தேதி நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு திமுக அரசு அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

முதலில் போராட்டம் நடத்த அனுமதித்த காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட பிறகு, கூட்டம் நடப்பதற்கு ஒரிரு நாட்களுக்கு முன்பு அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயம்? முதலிலேயே காவல்துறைக்குத் தெரியாதா குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாமா? கூடாதா என்று? அந்த இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாதென்றால் மாற்று இடத்தை முன்பே வழங்கி இருக்கலாமே? அதனை விடுத்து போராட்டம் நடத்தவே அனுமதி மறுப்பது ஏன்? எதனால்? யாருக்குப் பயந்து, யாருடைய உத்தரவின் பேரில் காவல்துறை முதலில் வழங்கிய அனுமதியை தற்போது மறுக்கிறது? திருச்செந்தூர் காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய அறமற்றச்செயல், தி.மு.க., ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு தரம்தாழ்ந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. வெட்கக்கேடு!

ஹிந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போர் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த தி.மு.க., அரசு கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டது. 6 முறை தி.மு.க., தமிழர் நிலத்தை ஆண்டபிறகும் தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும்.

அரசு அலுவலகங்களில் 'தமிழ் வாழ்க' என்று எழுதியதைத் தவிர, தி.மு.க., அரசு அன்னை தமிழின் வளர்ச்சிக்குச் செய்த நன்மை என்ன? தமிழ் வாழ்க என்று அரசு நிறுவனத்தில் எழுதி வைத்துவிட்டு தனியார் நிறுவனங்களைத் தமிழில் பெயர் வைக்கக்கோரி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து கொடுமையும் புரிந்தது தி.மு.க., அரசு.

தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி தமிழர்களைப் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளி இருப்பதும், அந்தப் போராட்டத்திற்கும் அனுமதி மறுப்பதும் எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். இதன் மூலம் 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்ற வசனங்கள் எல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பது மீண்டுமொருமுறை நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us