ஓராண்டாக 'அப்டேட்' இல்லாத தகவல் ஆணைய இணையதளம்
ஓராண்டாக 'அப்டேட்' இல்லாத தகவல் ஆணைய இணையதளம்
ஓராண்டாக 'அப்டேட்' இல்லாத தகவல் ஆணைய இணையதளம்

சென்னை:மாநில தகவல் ஆணைய இணையதளம், 'அப்டேட்' செய்யப்படாத நிலையில் உள்ளது.
மாநில தகவல் ஆணையத்திற்கு, www.tnsic.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளது. இதில், ஆணையத்தின் ஆண்டு அறிக்கைகள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள், ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான செய்திகள் வெளியிடப்படும்.
கடந்த ஓராண்டாக இந்த இணையதள பக்கம், 'அப்டேட்' செய்யப்படாமல் உள்ளது. இதனால், மாநில தகவல் ஆணையத்தின் புதிய அறிவிப்புகள் மற்றும் மனு மீதான நடவடிக்கை விபரங்களை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தகவல் ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த இணையதள பக்கத்தில் கடைசியாக, கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி சில செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதிலும், கடந்த 2023க்கு பின் வெளியான ஆண்டு அறிக்கைகள், இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.
அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதாந்திர ஆலோசனை கூட்டம், விழிப்புணர்வு கூட்டங்கள் நடந்ததற்கான புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்பு என, எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இந்த இணையதள பக்கத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனு மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ளும் வசதி உள்ளது. அதில், மனுவின் நம்பரை பதிவிடும்போது எந்த விபரமும் காட்டப்படுவதில்லை.
மாநில தகவல் ஆணையர்கள், தங்கள் துறை இணையதள பக்கத்தை கண்காணிக்கும் லட்சணம் இப்படி இருக்கிறது. இணையதள பக்கத்தை உடனடியாக, 'அப்டேட்' செய்து, துறையில் நடக்கும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.