Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வெளிச்சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் 'சர்சார்ஜ்' உயர்வு: மின் வாரிய முடிவுக்கு தொழில் துறையினர் எதிர்ப்பு

வெளிச்சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் 'சர்சார்ஜ்' உயர்வு: மின் வாரிய முடிவுக்கு தொழில் துறையினர் எதிர்ப்பு

வெளிச்சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் 'சர்சார்ஜ்' உயர்வு: மின் வாரிய முடிவுக்கு தொழில் துறையினர் எதிர்ப்பு

வெளிச்சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் 'சர்சார்ஜ்' உயர்வு: மின் வாரிய முடிவுக்கு தொழில் துறையினர் எதிர்ப்பு

ADDED : செப் 02, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
சென்னை: வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட்டிற்கு, 10 காசாக உள்ள கூடுதல் சர்சார்ஜ் கட்டணத்தை, 1.14 ரூபாயாக உயர்த்தும் மின் வாரிய முடிவுக்கு, தொழில் துறையினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உயரழுத்த பிரிவில் இடம் பெறும் ஜவுளி ஆலை உள்ளிட்ட நிறுவனங்கள், மின்வாரியத்திடம் இருந்து மட்டுமின்றி, வெளிச்சந்தையிலும் மின்சாரம் வாங்குகின்றன.

இந்த மின்சாரத்தை எடுத்து வர மின் வாரியத்தின் மின் வழித்தடம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, மின் வழித்தட கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

அதில், 'சர்சார்ஜ்' கட்டணம், 1 யூனிட்டிற்கு, 1.99 ரூபாயாக உள்ளது. அதனுடன் சேர்த்து, இந்தாண்டு ஏப்ரல் முதல் யூனிட்டிற்கு, 10 காசு கூடுதல் சர்சார்ஜ் வசூலிக்கப்படுகிறது.

அடுத்த மாதம், 1ம் தேதி முதல், 2025 மார்ச் வரை, கூடுதல் சர்சார்ஜை, 1.14 ரூபாயாக உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு, ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்துள்ளது.

அதன் அறிவுறுத்தலின் படி, மின் வாரியம் மக்களிடம் கருத்து கேட்டுள்ளது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் ஜவுளி, தோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோரிக்கை நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை, அந்நாட்டு அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதனால், அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், கூடுதல் சர்சார்ஜ் கட்டணத்தை யூனிட்டிற்கு, 10 காசில் இருந்து, 1.14 ரூபாயாக உயர்த்துவதற்கு, தொழில் துறையினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனவே, கூடுதல் சர்சார்ஜ் விதிக்கும் முடிவை கைவிடுமாறு, மின் வாரியத்திற்கு, தொழில் துறையினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:

மின் வாரியத்தில் இருந்து மட்டுமே மின்சாரம் வாங்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கி, மின்சார சந்தையில் போட்டி உருவாக்க வேண்டும் என்பதே மின்சார சட்டத்தின் நோக்கம். இதன் வாயிலாக, மின் உபயோகிப்பாளர்களுக்கு, குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால், அந்த கோட்பாட்டிற்கு எதிராக தங்களிடமே மின்சாரம் வாங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தவே, மின் வாரியம் இதுபோன்ற கட்டணங்களை மிகவும் அதிகப்படியாக நிர்ணயம் செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

மின் வாரிய கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதால் தான், குறைந்த விலையில் மின்சாரம் வாங்க வேண்டும் என்று, உபயோகிப்பாளர்கள் வெளியில் வாங்குகின்றனர்.

இந்நிலையில், கூடுதல் சர்சார்ஜ் கட்டண உயர்வு தொடர்பாக, மின் வாரியம் கருத்து கேட்கக் கூடாது என, நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு குறித்து மின் வாரியம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கருத்து கேட்காமல் கூடுதல் சர்சார்ஜ் நிர்ணயம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேக்கமடையும் நிலை இந்திய தொழில் வர்த்தக சபை கவுரவ செயலர் பிரதீப் நடராஜன் கூறியதாவது:

தமிழகத்தில் ஜவுளி, பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்நிறுவனங்கள், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றன. அமெரிக்காவின் வரி விதிப்பால், தமிழக நிறுவனங்களின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கமடையும் நி லை உள்ளது.

இந்த அசாதாரண சூழலில், கூடுதல் சர்சார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டதால், நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் மின் கட்டணம் அதிகம் உள்ளது. பல மாநிலங்களில் உள்ள பெரிய நிறுவனங்கள், மின்சார சந்தையில் மின்சாரம் வாங்குகின்றன.

இந்த சூழலில் கூடுதல் சர்சார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டால், மின்சார சந்தை, வெளிச்சந்தை யில் மின்சாரம் வாங்க முடியாத சூழல் ஏற்படும். இது, தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us