ரூ.141 கோடிக்கு விற்பனை வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அதிர்ந்த மளிகை கடைக்காரர்
ரூ.141 கோடிக்கு விற்பனை வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அதிர்ந்த மளிகை கடைக்காரர்
ரூ.141 கோடிக்கு விற்பனை வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அதிர்ந்த மளிகை கடைக்காரர்
ADDED : செப் 02, 2025 02:18 AM

புலந்தசாஹர் : உத்தர பிரதேசத்தில், 141 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்ததாக சிறிய மளிகைக் கடைக்காரருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், அந்த சிறு வணிகர் அதிர்ச்சியில் உறைந்தார்.
உ.பி.,யின் புலந்தசாஹரில் உள்ள குர்ஜா நயாகன்ஞ் பகுதியில் வசித்து வருபவர் சுதீர். இவர் தன் வீட்டில் இருந்தபடியே சிறிய மளிகைக்கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், வருமான வரித் துறையிடம் இருந்து கடந்த ஜூலை 10ம் தேதி ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதை பிரித்து படித்த சுதீர் அதிர்ச்சியில் உறைந்து போனார். காரணம், அதில் 141 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதால், அதற்கான வரியை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக குர்ஜா போலீஸ் ஸ்டேஷனில், சுதீர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தன் பான் கார்டு எண்ணை பயன்படுத்தி, டில்லியில் உள்ள சில நிறுவனங்கள் மோசடியாக வர்த்தகம் செய்திருப்பதாக சுதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வங்கி கணக்கு துவங்க, போலி நிறுவனங்களை உருவாக்க, வங்கி கடன்கள் பெற, வரி ஏய்ப்பு செய்ய என பல விதங்களில் ஒருவரது பான் கார்டு எண்ணை பயன்படுத்தி மோசடி செய்ய முடியும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அறிமுகம் இல்லாத நபர்களிடம் பான் எண் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என, பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.