பெட்ரோலில் எத்தனால் கலப்பு எதிர்த்த மனு தள்ளுபடி
பெட்ரோலில் எத்தனால் கலப்பு எதிர்த்த மனு தள்ளுபடி
பெட்ரோலில் எத்தனால் கலப்பு எதிர்த்த மனு தள்ளுபடி
ADDED : செப் 02, 2025 02:17 AM
பெட்ரோலுடன், 20 சதவீத எத்தனால் கலப்பதற்கு எதிரான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் அக்ஷய் மல்ஹோத்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பெட்ரோலுடன் எத்தனால் கலந்து உபயோகிக்கும் நடைமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் பழுதடைய வாய்ப்பு உள்ளது. கடந்த, 2023 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில், எத்தனால் கலந்த பெட்ரோலை கையாளும் திறன் வாய்ந்த இன்ஜின்கள் இல்லை.
மேலும், பொது மக்களுக்கு கடுமையான சிரமங்களை இது ஏற்படுத்தும் என்பதால், இதற்கான உரிய ஆய்வுகளை செய்த பிறகே இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தற்போது, எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்வது குறித்து அனைவருக்கும் தெரியும்படியான பெரிய விளம்பர பதாகைகளை பெட்ரோல் நிலையங்கள் வைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ''பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது பல்வேறு நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.
''இதன் காரணமாக நம் நாட்டில் கரும்பு விவசாயிகள் பெரிய அளவில் பலன் அடைவர். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' எனக் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் - .