இடஒதுக்கீடு விவகாரம்: 5 கோடி மராத்தாக்கள் அணி திரள்வர் மஹா., அரசுக்கு சமூக ஆர்வலர் எச்சரிக்கை
இடஒதுக்கீடு விவகாரம்: 5 கோடி மராத்தாக்கள் அணி திரள்வர் மஹா., அரசுக்கு சமூக ஆர்வலர் எச்சரிக்கை
இடஒதுக்கீடு விவகாரம்: 5 கோடி மராத்தாக்கள் அணி திரள்வர் மஹா., அரசுக்கு சமூக ஆர்வலர் எச்சரிக்கை

மும்பை: 'மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செவி சாய்க்காவிட்டால், 5 கோடி மராத்தாக்கள் மும்பையில் அணி திரள்வர்' என, சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே எச்சரித்துள்ளார்.
'மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினரை ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அரசு வேலைகள் மற்றும் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' எனக் கோரி, சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளார்.
தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் நான்காவது நாளாக அவர் நடத்தி வரும் போராட்டம் காரணமாக, மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜராங்கே நேற்று கூறியதாவது:
மராத்தா சமூகத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை, அரசு மிக எளிதாக எடுக்கலாம். நிஜாம் ஆட்சி காலத்தில் ஹைதராபாத், சதாரா அரசிதழ்களில் மராத்தா சமூகத்தினருக்கு குன்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அதை உதாரணமாக கொண்டு, மஹாராஷ்டிராவில் உள்ள அனைத்து மராத்தாக்களும் குன்பிகள் தான் என அரசு எளிதாக பிரகடனப்படுத்தலாம். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் மூலம், அதற்கான ஜாதி சான்றிதழ்களையும் வினியோகிக்க உத்தரவிடலாம். ஆனால், அதை அரசு செய்ய தயங்குகிறது.
மும்பைக்கு வர, மராத்தா மக்கள் சரியான நேரத்துக்காக காத்திருக்கின்றனர். முதல்வர் பட்னவிஸ் மராத்தா சமூகத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால், 5 கோடிக்கும் மேற்பட்ட மராத்தாக்கள் மும்பையில் அணி திரள்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசாத் மைதானம் மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு பகுதிகளை ஜராங்கேவின் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால், தெற்கு மும்பை போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது.