கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து தான் அ.தி.மு.க.,விற்கு இடம்
கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து தான் அ.தி.மு.க.,விற்கு இடம்
கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து தான் அ.தி.மு.க.,விற்கு இடம்
ADDED : ஜூன் 05, 2024 02:20 AM

நாகர்கோவில் : கன்னியாகுமரி லோக்சபா, விளவங்கோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., அதல பாதாளத்துக்கு சென்றது. நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட குறைவான ஓட்டுகள் பெற்றது, அ.தி.மு.க.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் தி.மு.க.விலிருந்து அண்மையில் இணைந்த பசிலியான் நசரேத் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு ஆரம்பம் முதலே, கட்சியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. யாரும் போட்டியிட தயாராகாததால் தான் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இவர் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த சமுதாயத்தின் ஓட்டுகளுடன் கட்சி ஓட்டும் சேரும்போது, கணிசமான ஓட்டுகளை பெற முடியும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் எல்லா கணக்குகளையும் புறந்தள்ளி அக்கட்சி அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர், 52,677 ஓட்டுகள் பெற்ற நிலையில், பசிலியான் நசரேத் 41,393 ஓட்டுகள் மட்டுமே பெற்று நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இது அக்கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஜெ., முதல்வராக இருந்தபோது 2014 தேர்தலில் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு, ஒரு லட்சத்து 71,000 ஓட்டுகளை பெற்றிருந்தது. தற்போது ஓட்டுகள் மிகவும் சரிந்துள்ளதால் கட்சித் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.
அதுபோல விளவங்கோடு சட்டசபை தொகுதியில் ராணி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவர் வெறும் 5,267 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இங்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளார்.