Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/65 இறப்பிற்கு காரணமான மெத்தனால் பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கல்

65 இறப்பிற்கு காரணமான மெத்தனால் பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கல்

65 இறப்பிற்கு காரணமான மெத்தனால் பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கல்

65 இறப்பிற்கு காரணமான மெத்தனால் பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கல்

ADDED : ஜூலை 05, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு சம்பவத்திற்கு காரணமான மெத்தனால், பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கி வைத்து கடத்தி சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து, பெட்ரோல் பங்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பூட்டி, தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 18ம் தேதி விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 65 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அதிக போதைக்காக சாராயத்தில் மெத்தனால் கலந்ததால் இறப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து சாராய வியாபாரிகள், மெத்தனால் சப்ளையர்கள் என 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் சாராய வியாபாரிகள் கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ்,50; அவரது மனைவி விஜயா,44; சின்னதுரை,36; ஜோசப்,40; கதிரவன்,30; கண்ணன்,40; மெத்தனால் சப்ளையர்கள் மடுகரை மாதேஷ்,19; சென்னை சிவக்குமார்,39; பன்ஷிலால்,32; கவுதம்சந்த்,50; சக்திவேல் ஆகிய 11 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோர்ட் அனுமதி பெற்று 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதில் மடுகரை மாதேஷிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், சென்னையில் உரிமம் பெற்ற மெத்தனால் சப்ளையர்கள் சென்னை சிவக்குமார்,39; பன்ஷிலால்,32; கவுதம்சந்த்,50; ஆகியோரிடம் எவ்வித உரிமம் இல்லாமலே மாதேஷ் மொத்தமாக மெத்தனால் வாங்கி வந்து, அதில் தண்ணீர் கலந்து சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். இதற்காக கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுாரில், இயங்காமல் உள்ள எஸ்ஸார் பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து, அங்குள்ள டேங்கரில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீரப்பெருமாநல்லுாரில் உள்ள பெட்ரோல் பங்கில் அதிரடியாக சோதனை நடத்தி, டேங்கரில் இருந்த மெத்தனாலை மாதரிக்கு எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பெட்ரோல் பங்க் டேங்கரை பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து புதுப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Image 1289586

இயங்காத பெட்ரோல் பங்க்

மெத்தனால் பதுக்கிய எஸ்ஸார் பெட்ரோல் பங்க் கடலுார் மாவட்டம் வடலுார் அடுத்த சேராக்குப்பத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கு சொந்தமானது. பங்கில் போதிய வியாபாரம் இல்லாததால், மூடி விட்டார்.இந்த பெட்ரோல் பங்கை கடந்த 15ம் தேதி மாதேஷ் குத்தகைக்கு எடுத்து, சென்னையில் இருந்து 2,000 லிட்டர் மெத்தனாலை டேங்கர் லாரியில் கடத்தி வந்து பூமியில் புதைக்கப்பட்டுள்ள டேங்கில் பதுக்கி வைத்துள்ளார்.



சீல்' வைக்காதது ஏன்?

பெட்ரோல் பங்கில் பதுக்கி வைத்துள்ள மெத்தனால் தான் என்பது தெரிந்தாலும், அதற்கான சோதனை முடிவுகள் அதிகாரப் பூர்வமாக வந்தால் மட்டுமே, பங்கிற்கு சீல் வைப்பது உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us