Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உலகத்தை வழி நடத்துவதே இந்துத்துவாவின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

உலகத்தை வழி நடத்துவதே இந்துத்துவாவின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

உலகத்தை வழி நடத்துவதே இந்துத்துவாவின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

உலகத்தை வழி நடத்துவதே இந்துத்துவாவின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

ADDED : ஜூன் 23, 2025 09:17 PM


Google News
Latest Tamil News
கோவை: ''இந்துத்துவாவின் நோக்கம், மற்ற நாடுகளை பிடிப்பதல்ல. உலகத்தை முன் நின்று அனைவரையும் வழி நடத்துவது தான்,'' என்று, கோவையில் நடந்த விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

பேரூர் ஆதினம் ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நூற்றாண்டு விழா, கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், நடந்தது.

இதையொட்டி உலக நலன் வேண்டி, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர், ராமலிங்கேஸ்வரருக்கு வேள்வி நடத்தினர். இதையொட்டி பேரூர் மடத்திற்கு வருகை தந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மடத்தில் உள்ள சாந்தலிங்கர் சன்னதியில் வழிபாடு செய்தார். உலக நலனுக்காக நடந்த வேள்வியில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், தன் கைகளால், ராமலிங்கேஸ்வரருக்கு, பஞ்சபூத ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் மற்றும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்,பால் தயிர், தேன், பழ வகைகள், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீறு ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்தார்.

அதன்பின், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகளுக்கு, பக்தர்கள் பாத பூஜை செய்தனர். தொடர்ந்து, ராமலிங்கேஸ்வரருக்கு அலங்கார பூஜை மற்றும் வேண்டுதல் வழிபாடு நடந்தது. இத்துடன், சிவ வேள்வி வழிபாடு நிறைவடைந்தது.

அதன்பின் நடந்த ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில், விழாவின் முக்கியத்துவம் குறித்து சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பேசினார்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து. 7 நிமிடமும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் குறித்தும், பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் குறித்தும், 2 நிமிடமும் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ராகுல்ராஜா நூற்றாண்டு விழாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சிறப்புரையாற்றினார்.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சின்மயா மிஷன் மித்ரானந்தா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இதில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின், பேரூர் படித்துறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபத்தை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் நேரில் பார்வையிட்டு, பேரூர் படித்துறையின் பெருமைகளை குறித்து கேட்டறிந்தார். அதன்பின், விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புதுடில்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இவ்விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசுகையில், 'அனைவரும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாரத நாடு, இமயமலையின் இரு கரங்கள் மற்றும் கடல்களால் சூழப்பட்டுள்ளது. இந்த மண்ணின் இன்றியமையாத தன்மை, உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம் தர்மத்தை வழங்க வேண்டும் என்ற புனிதமான கடமையுடன் இணைந்துள்ளது.

உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நாம் உலகில் இருக்கும் அனைவருடனும் நட்புடன் இருக்கிறோம். அவர்களுக்கு இந்த உண்மையை கற்றும் தருகிறோம். பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறோம். இந்துத்துவாவின் நோக்கம், மற்ற நாடுகளை பிடிப்பதல்ல. உலகத்தை முன் நின்று அனைவரையும் வழி நடத்துவது தான்.

சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தற்சார்பு பொருளாதாரம், குடும்பங்களை பேணுதல் உள்ளிட்ட சங்கம் மேற்கொள்ளும் ஐந்து முக்கிய பணிகளை, பேரூர் ஆதினமும் மேற்கொண்டு வருவது தெரிகிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும், 'என்றார்.

ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு வேல்

பேரூர் மடத்தில் நடந்த விழாவில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கு ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் ஆகியோர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கு, வெள்ளியிலான வேல் மற்றும் சிறிய முருகன் சிலையை பரிசளித்தனர்.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வேல் வழங்கினார். சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகளுக்கு, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வேல் வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us