சட்டவிரோதமாக பிளாஸ்டிக் தயாரிப்பு நடவடிக்கை எங்கே என ஐகோர்ட் கடுப்பு
சட்டவிரோதமாக பிளாஸ்டிக் தயாரிப்பு நடவடிக்கை எங்கே என ஐகோர்ட் கடுப்பு
சட்டவிரோதமாக பிளாஸ்டிக் தயாரிப்பு நடவடிக்கை எங்கே என ஐகோர்ட் கடுப்பு
ADDED : ஜூலை 04, 2025 10:47 PM
மதுரை:தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கு பிறப்பித்த அரசாணையை மக்களின் நலன் கருதி கடுமையாக அமல்படுத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும், மட்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு, அந்த தடை 2019 ஜன., 1 முதல் அமலில் உள்ளது.
இதை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. ஹோட்டல்கள், வணிக நிறுவனங்களில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் சில கம்பெனிகள் சட்டவிரோதமாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தயாரிக்கின்றன. இங்கிருந்து சென்று, தமிழகம் முழுதும் விற்பனை செய்கின்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, அரசின் தடையை அமல்படுத்த கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
தடையை மீறும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், அவற்றை வினியோகிக்க கொண்டு செல்லும் போக்குவரத்து நிறுவனங்கள், பயன்படுத்தும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ஏற்கனவே பிறப்பித்த அரசாணை அமலில் உள்ளது.
அதை, மக்களின் நலன்கருதி கடுமையாக அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டது.