அரசு தருவதோ ரூ.1,000; மகளிருக்கு கிடைப்பதோ ரூ.600
அரசு தருவதோ ரூ.1,000; மகளிருக்கு கிடைப்பதோ ரூ.600
அரசு தருவதோ ரூ.1,000; மகளிருக்கு கிடைப்பதோ ரூ.600

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மாதம் 1,000 ரூபாய் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் பயனாளிகளை வருவாய் துறைக்கு செல்லுமாறு விரட்டி அடிக்கின்றனர்.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ், குடும்ப தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், 2023ல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 19 மாதங்களில், 1.14 கோடி குடும்ப தலைவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் என, 21,657 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் குடும்ப தலைவியர் பலர், வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க இயலாமை, கணக்கு முடக்கம் உள்ளிட்ட காரணங்களால், வங்கி கணக்கை மாற்ற முயற்சித்து வருகின்றனர். சமூக நலத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், மாதம் 1,000 ரூபாய் பெற்றும் பயனில்லை என, குடும்ப தலைவியர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் பயனாளி ஒருவர் கூறியதாவது:
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது, பூஜ்ஜிய வங்கி இருப்பு கணக்கு வழங்காமல், குறைந்தபட்ச தொகை பராமரிக்கப்படும் வங்கி கணக்கை கொடுத்து விட்டேன். இதனால், அரசு மாதம் 1,000 ரூபாய் செலுத்தியும், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
வங்கி நிர்வாகம் குறைந்தபட்சம் 500 ரூபாய் பராமரிக்க வேண்டும் என்கிறது. மாறாக, முழுத் தொகையும் எடுத்தால், அடுத்த மாதம் 1,000 ரூபாய் வரவு வைக்கும் போதே, பராமரிப்பு தொகை, அபராதம் என 350 ரூபாய் பிடித்து விடுகின்றனர்.
இதனால், திட்டம் துவங்கியது முதல் மாதம் 600 ரூபாய் தான் எனக்கு கிடைக்கிறது. எனவே, மாற்று வங்கியில் பூஜ்ஜிய வங்கி இருப்பு கணக்கை துவங்கி, கடந்தாண்டு நவம்பர் மாதம் வங்கி கணக்கை மாற்றும்படி, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தேன்.
அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களிடம் கேட்ட போது, 'திட்டம் மட்டுமே எங்களுடையது; செயல்பாடு வருவாய் துறையினருடையது; நீங்கள் அங்கு சென்று கேளுங்கள்' என விரட்டி விட்டனர்.
சமூக நலத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கியும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் கீதா ஜீவன் இப்பிரச்னையில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.