அரை ஏக்கர் இல்லாததால் தர மறுத்தது வாரியம்: உடனே கொடுக்க உத்தரவிட்டார் குறை தீர்ப்பாளர்
அரை ஏக்கர் இல்லாததால் தர மறுத்தது வாரியம்: உடனே கொடுக்க உத்தரவிட்டார் குறை தீர்ப்பாளர்
அரை ஏக்கர் இல்லாததால் தர மறுத்தது வாரியம்: உடனே கொடுக்க உத்தரவிட்டார் குறை தீர்ப்பாளர்
ADDED : ஜூன் 08, 2025 02:24 AM

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தில், ரமேஷ் என்பவரின் விவசாய நிலத்திற்கு, 'அரை ஏக்கர் நிலம் இல்லை' என்ற காரணத்தை கூறி, விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தை மின் வாரியம் நிராகரித்தது.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த குறை தீர்ப்பாளர், ஒரு மாதத்திற்குள், 7.50 மோட்டார் பம்ப் குதிரை திறனுடன், இலவச விவசாய மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, மின் இணைப்பு கேட்டு, பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
திருவள்ளூர், கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், 7.50 குதிரை திறன் மோட்டார் பம்புக்கு விவசாய மின் இணைப்பு கோரி, 2011 ஜனவரியில் மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
பரிசீலனை
கடந்த, 2021 செப்டம்பரில் தமிழக அரசு, ஒரு லட்சம் விவசாய விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், 2021 டிசம்பரில், ரமேஷின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மின் இணைப்பு வழங்க, மோட்டார் பம்புடன் தயார் நிலையில் இருப்பதற்கான அறிக்கையை பதிவு செய்ய மின் வாரியம் அறிவுறுத்தியது.
அதை சமர்ப்பித்த பின், 'மின் இணைப்பு பெற குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், ரமேஷிடம் அரை ஏக்கர் நிலம் இல்லை' என்ற காரணத்தை கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட நபர், மாவட்ட குறைதீர் மன்றத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு, மின் வாரியத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை ஏற்காத அவர், மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் உள்ள மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்து, குறை தீர்ப்பாளர் பிறப்பித்த உத்தரவு:
மேல்முறையீட்டாளர் தன் வாதத்தில், 'செயற்பொறியாளரால் தயார் நிலை பதிவு செய்ய அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
'கடிதத்தில் குறிப்பிட்ட நாளில் ஆவணங்களுடன் சென்று கலந்தாய்வு செய்ததில், சம்பந்தப்பட்ட நிலம் 50 சென்டுக்கு குறைவானது என்ற காரணத்திற்காக, மின் இணைப்பு வழங்க இயலாது என்று தெரிவித்தனர்' என தெரிவித்துள்ளார்.
மேலும், 'மின் இணைப்பு பெற குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை, ஆணையம் 2020ல் விதித்துள்ளதாகவும், தன் விண்ணப்பம், 2011 ஜன., 7ல் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்து உள்ளார்.
முன்னுரிமை பாதிப்பு
கடந்த, 2011 ஜன., 7ல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம், அரை ஏக்கர் நிலம் இல்லை என்று மின் வாரியத்தால் மறுக்கப்பட்டது ஆவணங்கள் வாயிலாக தெரிய வருகிறது. இதனால், மேல்முறையீட்டாளரின் முன்னுரிமை பாதிக்கப்பட்ட தாகவே கருத இயலும்.
எனவே, காலதாமதமின்றி, கண்டிகை கிராமத்தில் உள்ள மேல்முறையீட்டாளரின் விவசாய நிலத்திற்கு, 7.50 குதிரை திறன் மோட்டார் பம்ப் இலவச மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்த ஆணையை நிறைவேற்றிய அறிக்கையை, 30 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.