கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து உபமின் நிலையத்தில் தீ விபத்து
கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து உபமின் நிலையத்தில் தீ விபத்து
கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து உபமின் நிலையத்தில் தீ விபத்து
ADDED : ஜூன் 08, 2025 01:25 AM

துாத்துக்குடி:மின் கொள்முதல் செய்து பகிரும் உப மின் நிலையத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து பகுதியில் தமிழக மின் தொடரமைப்பு கழகத்திற்கு சொந்தமான உப மின் நிலையம் உள்ளது.
கடந்த 2014ல் துவங்கப்பட்ட 400 / 230 / 110 கிலோ வாட் உபமின் நிலையத்தில் ஒரு டிரான்ஸ்பார்மர் 60,000 லிட்டர் ஆயில் கொள்ளளவு கொண்டதாகும்.
துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காற்றாலை, சோலார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்பட்டு இந்த உபமின் நிலையம் மூலம், பவர் கிரீட்டிற்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அங்குள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து புகை கிளம்பியது. காற்று பலமாக வீசியதால் தீ மற்ற பகுதிகளுக்கும் விரைந்து பரவியது. மற்ற டிரான்ஸ்பார்மர்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில், 'லைன் ஆப்' செய்யப்பட்டது.
எனினும், கரும்புகை அதிக அளவு வெளியேறி புகை மண்டலமாக காணப்பட்டது.
கோவில்பட்டி, கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் மணல் கொட்டி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் வீரர்கள் ஈடுபட்டனர்.
கரும்புகை வானில் பரவியதால் கயத்தாறு சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர்மின் வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட டிரான்ஸ்பார்மரின் அடிப்பகுதியில் 60,000 லிட்டர் ஆயில் இருப்பதால் இன்னும் சில தினங்களுக்கு அதில் இருந்து புகை வந்து கொண்டே இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், மின் கொள்முதல் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.