இந்த 10 நாட்கள் ஒவ்வொன்றையும் கவனமாக செய்ய வேண்டும்
இந்த 10 நாட்கள் ஒவ்வொன்றையும் கவனமாக செய்ய வேண்டும்
இந்த 10 நாட்கள் ஒவ்வொன்றையும் கவனமாக செய்ய வேண்டும்

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கல்லுாரிகள், படிப்புகளை தேர்வு செய்வது குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை பிரிவு செயலர் புருஷோத்தமன் விரிவாக விளக்கினார்.
புருஷோத்தமன் பேசியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டில் இன்ஜினியரிங் படிப்புக்கு, 2 லட்சத்து, 80,398 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட, 40,000 பேர் அதிகம். விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விண்ணப்பித்த அனைவருக்கும், 'ரேண்டம்' எண் வழங்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, 'ஐ.டி., பாஸ்வேர்டு' வாயிலாக, www.tneaonline.org என்ற இணையதளத்தில் முழு தகவலை பார்த்துக்கொள்ளலாம். அதில், ஓவர் ஆல் ரேங்க், ஜாதிவாரி இடஒதுக்கீடு ரேங்க், அதன், 'கட் ஆப் மார்க்' குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை வைத்து, உங்கள் சேர்க்கை நிலையை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
ஒரே, 'கட் ஆப் மார்க்' வந்தால், மற்ற பாடங்களின் மதிப்பெண், பிறந்த தேதி உள்ளிட்ட பல காரணங்களை கணக்கீடு செய்து, 'சீட்' வழங்கப்படும். வரும் 27ம் தேதி, 'ரேங்க் லிஸ்ட்' வெளியிடப்படும். இதில், ஏதாவது குறைபாடு கண்டறிந்தால், முதல் நான்கு நாட்கள் திருத்தம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.
110 மையங்கள்
தமிழ்நாடு மாணவர் பொறியியல் சேர்க்கை சேவை மையம் என, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இரண்டு செயல்படுகின்றன. தமிழகம் முழுதும், 110 மையங்கள் செயல்படுகின்றன. எந்தெந்த இடங்களில் இருக்கின்றன; தொடர்பு எண்கள், இ - மெயில் முகவரி விபரங்களை எல்லாம் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த மையங்களை, மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாணவர்களாகிய நீங்கள் பெற்ற மார்க் அடிப்படையில்தான், ரேங்க் இடம் பெறும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் என, முதலில் கவுன்சிலிங் நடக்கும். பொதுப்பிரிவு கவுன்சிலிங் உள்ளிட்ட தேதி விபரங்களை, வரும், 27ம் தேதி, தமிழக உயர்கல்வித்துறை வெளியிடும்.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு சலுகை உண்டு. தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லுாரிகளிலும் அந்த இடங்கள் நிரப்பப்படும். இந்த ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு அனைத்து கட்டண சலுகையும் உண்டு. இந்த பிரிவில் ஒதுக்கீடு பெற, 50,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பள்ளியில் மதிப்பெண் பெற, நீங்கள் கடுமையாக உழைத்திருப்பீர்கள். அதுபோல, கவுன்சிலிங்கில் பங்கேற்கும்போதும், கல்லுாரி மற்றும் படிப்பை தேர்வு செய்ய, 10 நாட்களுக்கு கவனமாக உழைக்க வேண்டும். பொதுப்பிரிவு கவுன்சிலிங்கின்போது, பல சுற்றுகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.
அதேபோல, உங்களுக்கான கல்லுாரி, படிப்புகளை தேர்வு செய்து, சாய்ஸ் வழங்கி, அந்த மூன்று நாட்களுக்குள் 'லாக்' செய்து விட வேண்டும். உங்களது விருப்பம் எவ்வளவு வேண்டுமென்றாலும், சாய்ஸில் தேர்வு செய்யலாம்.
கணினி செயல்பாட்டில், 'சர்வர்' பிரச்னை ஏற்படாது, இரவுபகலாக ஆராய்ந்து, உங்களுக்கான கல்லுாரி, படிப்பை தேர்வு செய்து கொள்ளலாம். தேர்வு செய்யும் கல்லுாரியின், என்.ஆர்.எப்., ரேங்க், என்.ஏ.சி., கிரேடு, தேர்வு முடிவுகள், கடந்த காலங்களில் அளித்துள்ள வேலைவாய்ப்பு விகிதம் உள்ளிட்டவை குறித்து ஆராய வேண்டும். 1800 4250110 என்ற இலவச எண்ணில், மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு பயன் பெறலாம்.
அலாட்மெண்ட்?
ஒருபோதும் உங்களது, யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு, ஓ.டி.பி., போன்றவற்றை பகிர வேண்டாம். ஏனெனில், யாராவது அதில் தவறாக பதிவு செய்து, உங்கள் சாய்ஸை மாற்றிவிட வாய்ப்பு உண்டு. இதேபோல, கல்லுாரி, படிப்பை தேர்வு செய்வதற்கு எளிமையான ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுஉள்ளது. உங்களது சாய்ஸ் விபரங்களை, 'பிரின்ட் அவுட்' எடுத்துக் கொள்ளலாம்.
இதையடுத்து, உங்களுக்கான தற்காலிக 'அலாட்மென்ட்' வந்துவிடும். இரண்டு நாட்களுக்குள், அதில் ஒன்றை 'கன்பார்ம்' செய்ய வேண்டும். 6வது நாளில் பைனல் அலாட்மென்ட் வந்து விடும். அதனை தேர்வு செய்து, உரிய கல்லுாரிக்குச் சென்று, கட்டணம் செலுத்தி, ஐந்து நாட்களுக்குள் கல்லுாரியில் சேர்ந்துவிட வேண்டும்.
அல்லது நேரடியாக சென்று, தகவலை பெறுவதோடு, திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். இணையதளத்துக்கு சென்று, என்னென்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.