இன்ஜினியர்கள் தேவை உலகளவில் அதிகரிப்பு: வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் கற்பது அவசியம்
இன்ஜினியர்கள் தேவை உலகளவில் அதிகரிப்பு: வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் கற்பது அவசியம்
இன்ஜினியர்கள் தேவை உலகளவில் அதிகரிப்பு: வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் கற்பது அவசியம்

சென்னை:''உலகளவில் இன்ஜினியர் வேலைவாய்ப்புகள் அதிகரித்து இருப்பதால், மற்ற நாட்டு மொழிகளையும் கற்பது அவசியம்,'' என, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் பேசினார்.
அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 'ஆன்லைன்' கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.
இந்த கவுன்சிலிங்கை, டி.என்.இ.ஏ., என்ற இணையதளத்தின் வாயிலாக, தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது.
இந்நிலையில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, கவுன்சிலிங் குறித்து வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி' நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.
சென்னை தி.நகர் வாணி மகாலில் காலை, 10:00 முதல் பகல் 1:00 மணி வரையிலும், குன்றத்துார் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில், மாலை 3:00 முதல் 6:00 மணி வரையிலும், இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நுணுக்கங்கள், சரியான 'சாய்ஸ் பில்லிங்' பதிவிடுவதற்கான வழிமுறைகள், 'புரொவிசனல் அலாட்மென்ட்' பெறுதல், இந்தாண்டு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர் சந்தேகங்கள் உள்ளிட்டவற்றுக்கு, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் விளக்கம் அளித்தார்.
எந்த 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது; நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன; 'கோர்' இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம் உள்ளிட்டவை குறித்து, கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் பி.ஸ்ரீராம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், இரண்டு இடங்களிலும் தலா, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் பங்கேற்றனர். அப்போது, கல்வி ஆலோசகர்கள் வழங்கிய ஆலோசனை மற்றும் விளக்கங்களை பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர், குறிப்பு எடுத்து கொண்டனர். மேலும், அவர்களுக்கு எழுந்த கேள்விகளையும் கேட்டு பதிலை பெற்றனர்.
தொடர்ந்து, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், மாநிலம் முழுதும், 16 இடங்களில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
நிகழ்ச்சியில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் பேசியதாவது:
'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, மாணவர்கள் உயர் படிப்புகளில் சேருவதற்கான வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
இந்தாண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு, 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து, 2.49 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். ஒரு காலத்தில், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் மோகம் படிப்படியாக குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, 80,000 மாணவர்கள் தான் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே இன்ஜினியரிங் தேவை இருந்தது. தற்போது, பல்வேறு நாடுகளிலும் இன்ஜினியரிங் தேவை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, சீனா, ஜப்பான், ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகளில், உற்பத்தி போன்ற பலவற்றில், இன்ஜினியரிங் தேவை அதிகமாக உள்ளது. அவர்கள் இந்தியர்களை வேலையில் சேர்க்க தயாராக உள்ளனர். எனவே, தமிழ், ஆங்கில மொழியுடன், மற்ற நாட்டு மொழிகளையும் கற்பது அவசியம்.
முன்பெல்லாம் மாணவர்கள், மூன்றாம் ஆண்டு படித்த பின் தான், வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால், மாணவர்களிடம் புதிய கண்டுப்பிடிப்புகள், பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் ஆற்றல் இருந்தால் மட்டுமே, அவர்களால் சாதிக்க முடியும்.
எனவே, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வியை வழங்குகிறது. ஒவ்வொரு மாணவரும் படித்து முடித்து செல்லும்போது, ஐந்து விதமான திறன் பெறுவது அவசியம். தங்களது, 'பயோடேட்டா'வில், அவற்றை குறிப்பிடுவதும் முக்கியம். குறிப்பாக, அறிவாற்றால், சான்றிதழ், திட்டம், பயிற்சி, சாதனை ஆகிய ஐந்தும் குறிப்பிட வேண்டும்.
உங்களிடம் பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் இருக்கிறதா என்பதை, நிறுவனங்கள் தேடுகின்றன. அது இருந்தால் வெற்றி கிடைக்கிறது.
மேலும், 'தினமலர்' நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூப் ஆப் டெக்னாலஜி இணைந்து, எங்கள் கல்லுாரியில் சேருபவர்களுக்கு, 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவி தொகையும் வழங்கப்படும். அதன்படி, 5 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
கடந்த 2022 முதல் மூன்று ஆண்டுகளாக, இன்ஜினியரிங் துறையில் மாணவர்கள் விரும்பி தேர்வு செய்யும் கல்லுாரிகளில், சென்னை இன்ஸ்டிடியூப் ஆப் டெக்னலாஜி இரண்டாவது இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.