ஆளை விடுங்க சாமி; அலறி ஓடும் மின்வாரிய அதிகாரிகள்; அமலாக்கத்துறை ரெய்டு அச்சம் எதிரொலி!
ஆளை விடுங்க சாமி; அலறி ஓடும் மின்வாரிய அதிகாரிகள்; அமலாக்கத்துறை ரெய்டு அச்சம் எதிரொலி!
ஆளை விடுங்க சாமி; அலறி ஓடும் மின்வாரிய அதிகாரிகள்; அமலாக்கத்துறை ரெய்டு அச்சம் எதிரொலி!
ADDED : ஜூன் 12, 2025 07:44 AM

சென்னை: மின் வாரியத்தில் இயக்குநர் பதவியை பிடிக்க, கடும் போட்டி நிலவிய நிலையில், தற்போது அமலாக்கத் துறை சோதனையால், அந்த பதவிக்கு வர, தலைமை பொறியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக, மின் வாரியம் செயல்படுகிறது. இவற்றின் தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், ஒவ்வொரு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்களாக, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் உள்ளனர்.
பேரம்
இது தவிர, மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குநர் உட்பட, 11 இயக்குநர் பதவிகள் உள்ளன. இந்த பதவிக்கு தலைமை பொறியாளர்களாக இருப்பவர்களில் ஒருவர் நியமிக்கப்படுவார். கடந்த, 2011 - 16 அ.தி.மு.க., ஆட்சியில் இயக்குநர் பதவியை பிடிக்க, கோடிக்கணக்கில் பேரம் நிலவியது.
அதன்படி, ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் பெரிய நிறுவனங்கள், வேண்டிய அதிகாரிகளை இயக்குநர்களாக நியமிக்க, ஆட்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில், 'கவனிப்பு' செய்தன. இதனால், இயக்குநர் பதவியை பிடிக்க ஒப்பந்த நிறுவனங்களின் சிபாரிசுகளை நாடினர்.
சோதனை
பின், 2016 - 21 ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக வேண்டிய பணிகளை, ஆட்சியாளர்கள் நிறைவேற்றி கொண்டனர். இயக்குநர் பதவியை பிடிக்க, பொறியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த, 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முந்தைய, 'பார்முலா' அப்படியே பின்பற்றப்பட்டது. அப்போதும், இயக்குநர் பதவியை பிடிக்க, பொறியாளர்கள் இடையே போட்டி இருந்தது. மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில், 2023ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின், 'டாஸ்மாக்' நிறுவன தலைமை அலுவலகம், அதன் உயரதிகாரிகள், மின் வாரியத்தில் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில், அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். எனவே, மின் வாரியத்தில் கடந்த மார்ச் முதல் மின் தொடரமைப்பு கழக இயக்குநர் பதவியும், ஏப்ரலில் இருந்து பசுமை எரிசக்தி கழக தொழில்நுட்ப இயக்குநர், மின் இயக்க இயக்குநர் பதவிகளும், கடந்த 31 முதல், மின் உற்பத்தி பிரிவு இயக்குநர் பதவியும் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு வர, தலைமை பொறியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது: தலைமை பொறியாளராக இருப்பவர்களை, 'சீனியாரிட்டி' வரிசை அடிப்படையில், இயக்குநர் பதவிக்கு நியமிக்க வேண்டும். இதை பின்பற்றாமல், அரசியல் சிபாரிசு, ஒப்பந்த நிறுவனங்கள் சிபாரிசு இருப்பவர்களுக்கு தான் இயக்குநர் பதவி வழங்கப்பட்டது.
சிபாரிசு
எனவே, ஒரு இயக்குநர் ஓய்வு பெறுவதற்கு இரண்டு மாதங்கள் இருக்கும் முன்பே, அந்த பதவியை பிடிக்க, பலரும் சிபாரிசு தேடினர். இதனால் வாய்ப்பு இருந்தும், நேர்மையான அதிகாரிகள் முக்கிய பதவிகளுக்கு வராமல் ஓய்வு பெற்றனர்.
இந்த முறை நான்கு இயக்குநர் பதவிகள் காலியாக இருந்தும், அமலாக்கத் துறை சோதனையால் பீதி அடைந்துள்ள பலர், இயக்குநர் பதவிக்கு ஆர்வம் காட்டாமல் உள்ளனர். எனவே, அரசு சீனியாரிட்டி அடிப்படையில் இயக்குநர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.