/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் அருகே கண்டறியப்பட்ட பல்லவர் கால பெண் தெய்வ சிற்பங்கள் விழுப்புரம் அருகே கண்டறியப்பட்ட பல்லவர் கால பெண் தெய்வ சிற்பங்கள்
விழுப்புரம் அருகே கண்டறியப்பட்ட பல்லவர் கால பெண் தெய்வ சிற்பங்கள்
விழுப்புரம் அருகே கண்டறியப்பட்ட பல்லவர் கால பெண் தெய்வ சிற்பங்கள்
விழுப்புரம் அருகே கண்டறியப்பட்ட பல்லவர் கால பெண் தெய்வ சிற்பங்கள்
ADDED : ஜூன் 12, 2025 07:23 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருவெண்ணெய்நல்லுார் தாலுகா மேல்தணியாலம்பட்டு கிராமத்தில், விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், ஆர்வலர் தமிழழகன் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்த தேவி சிற்பங்கள் அங்கு கண்டறியப்பட்டன.
இது குறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
மேல்தணியாலம்பட்டு ஏரிக்கரையில் விஷ்ணு துர்கை கோவில் உள்ளது. கோவிலின் கருவறை பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக கொற்றவை சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. எட்டு கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை, எருமையின் தலைமீது கால்களை வைத்து, கம்பீரமாக நிற்கிறார்.
முன்னிரு கரங்களில், வலது கரம் சுருட்டிய பாம்பை பிடித்த நிலையிலும், இடது கரம் தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. மற்ற 6 கரங்களில் சங்கு, சக்கரம், வில், வாள், மணி, கேடயம் காணப்படுகின்றன. இடது தோளுக்கு பின்னால், அம்புகளை வைப்பதற்கான அம்பறாத் துாணி காட்டப்பட்டுள்ளது. கழுத்து, கைகள், கால்களில் அழகிய அணிகலன்கள் காணப்படுகின்றன.
மூத்ததேவி
கோவிலுக்கு வெளியே, சிறிய அளவிலான மாடத்தில் உள்ள ஒரு சிற்பத்தை, அப்பகுதி மக்கள் காளி என கருதி வணங்கி வருகின்றனர். ஆனால், அச்சிற்பம், ஜேஷ்டாதேவி என்றழைக்கப்படும் மூத்ததேவி. பெருத்த வயிறு, கனத்த மார்புகளுடன், கால்களை மடக்கி அமர்ந்த நிலையில், மூத்ததேவி காணப்படுகிறார்.
வலது கை தாமரை மலரை ஏந்தி, இடது கை தொடை மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. அருகில் மகன் மாந்தன், மகள் மாந்தி உள்ளனர். வலது மேற்புறத்தில் காக்கை உருவம் உள்ளது. இவ்விரு சிற்பங்களும், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் காலமான கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்தவை.
இவ்வாறு அவர் கூறினார்.