'ட்ரோன்'கள் பயன்படுத்தி வரையாடுகள் கணக்கெடுப்பு
'ட்ரோன்'கள் பயன்படுத்தி வரையாடுகள் கணக்கெடுப்பு
'ட்ரோன்'கள் பயன்படுத்தி வரையாடுகள் கணக்கெடுப்பு
ADDED : ஜன 07, 2024 01:51 AM

சென்னை:நீலகிரி வரையாடுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாதிரி கணக்கெடுப்பு நடந்து வருவதாக, தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகஅவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க, நீலகிரி வரையாடு திட்டத்தை, கடந்த அக்., 12ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை குறித்து, கணக்கெடுப்பு நடத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய வன விலங்கு நிறுவனம், தமிழகத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனமான, -டபிள்யூ.டபிள்யூ.எப்.இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் ஆலோசித்து, நீலகிரி வரையாடுகளை கணக்கிடுவதற்கான மாதிரி கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி வரையாடுகள் உள்ள வால்பாறை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நீலகிரி வரையாடுகள் திட்ட இயக்குனர் கணேசன் தலைமையில், 25 பேர் கொண்ட ஆராய்ச்சி பணியாளர், களப் பணியாளர் அடங்கிய குழு, மூன்று நாட்கள் மாதிரி கணக்கெடுப்பை நடத்துகிறது.
ஐந்து வெவ்வேறு வழிமுறைகளில், மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் எது சிறந்த, பொருத்தமான முறையோ அதை பின்பற்றி, தமிழகத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படும். முதல் முறையாக மாதிரி கணக்கெடுப்பில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.