லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
ADDED : மார் 20, 2025 08:01 AM

சென்னை:'விடுப்பு எடுத்து போராடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும்' என, தலைமை செயலர் முருகானந்தம்உத்தரவிட்டுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; சரண் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.
அறிவுறுத்தல்
சரண் விடுப்பு சலுகை, 2026 ஏப்ரல் 1 முதல் மீண்டும் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை, அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இதையறிந்த அரசு, போராட்டத்தை முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. அதன்படி, 'விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை பின்பற்றும்படி, அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்கள், கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தங்கள் போராட்ட வியூகத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாற்றியுள்ளனர்.
அதன்படி, அரசு விடுமுறை நாளான 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ வாயிலாக, மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகம் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கவுள்ளது. கோரிக்கைகளை வென்றெடுக்க, அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அணி திரண்டு வர வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தர்ணா போராட்டம்
இதேபோல, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் கூட்டமைப்பான, 'போட்டா - ஜியோ' வாயிலாகவும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில், 24ம் தேதி ஆலோசனை கூட்டமும், ஏப்ரல் 3ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடக்கவுள்ளது. ஏப்ரல் 25ம் தேதி, மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.