குற்றங்களை தடுக்க முடியாத முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் மதுரையில் டாக்டர் சரவணன் பேட்டி
குற்றங்களை தடுக்க முடியாத முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் மதுரையில் டாக்டர் சரவணன் பேட்டி
குற்றங்களை தடுக்க முடியாத முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் மதுரையில் டாக்டர் சரவணன் பேட்டி
ADDED : ஜூன் 16, 2025 04:15 AM
மதுரை: ''தமிழகத்தில் 1.33 லட்சம் போலீசார் இருந்தும் குற்றங்களை தடுக்க முடியாமல் உள்ள முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:
கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியது போல் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் திராவிட மாடலா. தன் துறையின் கட்டுபாட்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷனையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஸ்டாலின் கையில் உள்ள உள்துறை மிகவும் மோசமாக உள்ளது. 1.33 லட்சம் போலீசார் இருந்தும் குற்றங்களை தடுக்க முடியவில்லை.
கடந்த நான்காண்டுகளில் 18 ஆயிரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து போக்சோ வழக்கு பதிவானது. இந்தாண்டில் ஜனவரி 1 முதல் ஜூன் 12 வரை 878 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 7000 படுகொலை நடந்துள்ளது. 15,280 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்தும் குற்றங்கள் குறையவில்லை. 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது. போதைப்பொருள்வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
கள்ளச் சாராயத்தால் 100 பேர் பலியாகியுள்ளனர். 12 சம்பவங்களில் வயதான தம்பதிகள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக மதுரை வி. சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்டதோடு, ஏட்டுவை தாக்கி ஸ்டேஷனை பூட்டி விட்டு சென்றனர். தமிழகத்தில் இது போன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை. உள்துறையை கையில் வைத்துள்ள ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். இவ்வாறு கூறினார்.