மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ‛‛டவுட்''
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ‛‛டவுட்''
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ‛‛டவுட்''
ADDED : ஆக 03, 2024 05:38 PM

மேட்டூர்: ''மேகதாது அணை குறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது சந்தேகமாக உள்ளது. இது மத்திய அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அணை வலது, இடது கரை, 16 கண் மதகு பகுதி, நீர்மின் நிலையங்களை பார்வையிட்ட பிறகு அவர் கூறியதாவது:
மேட்டூர் அணைக்கு திறந்துவிடும் நீரை, தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணாக்குவதாக கர்நாடகா கூறுகிறது. அதேநேரம் தமிழக சாகுபடிக்கு தேவைப்படும்போது மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை தராமல் இழுத்தடிப்பது ஏன் என தெரியவில்லை. தற்போது உபரிநீர் திட்டம் மூலம், 56 ஏரிகள் நிரப்பப்படுகின்றன. விரைவில் இதர ஏரிகளிலும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு - அவினாசி பாசன திட்டத்தை நிறைவேற்ற இடையூறாக உள்ள சிலர் நீதிமன்றத்துக்கு சென்று விடுகின்றனர். அங்கு வழக்கு முடிய பல மாதங்களாகின்றன. அத்திட்டம் விரைவில் முடிந்து தொடங்கி வைக்கப்படும்.
மேகதாதுவில் அணை கட்ட நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே கர்நாடகா அரசு திட்ட வரைவு தயாரித்து, காவிரி நடுவர் மன்றத்தில் வழங்கியது. ஆனால், காவிரி கீழ்பகுதி அரசின் அனுமதி பெற்றால் மட்டுமே அணை கட்ட முடியும் என்பதால் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவை, காவிரி திட்டத்தில் காவிரி நதி நீரை விடுவிப்பது குறித்து பேசியுள்ளது.
மேகதாது அணை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. தற்போது மேகதாது அணை குறித்து, காவிரி நடுவர் மன்றம் பேசுவது சந்தேகமாக உள்ளது. இது மத்திய அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தமிழகத்துக்கு பாதகமான செயலாக இருக்குமா? என்றால், அதற்கு பதில் ஆம் தான். இவ்வாறு அமைச்சர் கூறினார்.