செங்கல்பட்டு - திண்டிவனம் ஆறுவழி சாலை திட்டம் நிதி ஒதுக்க மறுக்கும் ஆணையம்
செங்கல்பட்டு - திண்டிவனம் ஆறுவழி சாலை திட்டம் நிதி ஒதுக்க மறுக்கும் ஆணையம்
செங்கல்பட்டு - திண்டிவனம் ஆறுவழி சாலை திட்டம் நிதி ஒதுக்க மறுக்கும் ஆணையம்
ADDED : ஜூன் 11, 2025 01:41 AM
சென்னை:செங்கல்பட்டு - திண்டிவனம் ஆறுவழி சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் இருந்து கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை செல்வதற்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பலரும் பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இந்த சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் பரனுார் - விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாலவாடி இடையே, போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மொத்தம் 68 கி.மீ., நீளமுள்ள இந்த சாலையில், 30 இடங்களில் சாலை சந்திப்புகள் உள்ளன.
மேலும், 33 இடங்கள், விபத்து கரும்புள்ளி பகுதியாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது. விபத்துகளை கட்டுப்படுத்தவும், சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், பரனுார் - சாலவாடி இடையே, தற்போதுள்ள நான்கு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
செங்கல்பட்டு - திண்டிவனம் ஆறுவழி சாலை திட்டத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இப்பணிக்கு, 2,600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
புலிப்பாக்கம் சந்திப்பு, திண்டிவனம் சந்திப்பு ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளன.
முழு ஒத்துழைப்பு
முக்கிய சந்திப்புகளில், 15 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.
மேலும், 10 இடங்களில் தரைப்பாலங்கள் விரிவாக்கமும், 14 இடங்களில் மறுகட்டுமானமும் செய்யப்பட உள்ளன.
இதற்கு, தமிழக அரசும், மாநில நெடுஞ்சாலைத் துறையும் முழு ஒத்துழைப்பு அளிப்பதால், நிலம் கையகப்படுத்தும் பணியில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்க தாமதித்து வருகிறது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தால், அதற்கான நிதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தான் நடைமுறை. ஆனால், திட்ட அறிக்கையை பெற்ற ஆணையம், அதை கிடப்பில் வைத்து விட்டது.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.