பட்டியலின மக்கள் தெருக்களில் கோவில் தேர் செல்ல முடியுமா? ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
பட்டியலின மக்கள் தெருக்களில் கோவில் தேர் செல்ல முடியுமா? ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
பட்டியலின மக்கள் தெருக்களில் கோவில் தேர் செல்ல முடியுமா? ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை:'பெரம்பலுார், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோவில் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் செல்ல முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கை அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு
பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில், வேத மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலின் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என கூறி, வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த வினோத்குமார், மணிவண்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மனு விபரம்:
கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த அனுமதிப்பதில்லை. வழிபாடு நடத்துவதில் உள்ள பாகுபாடு குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அமைதி பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடந்தன. ஆனாலும், பட்டியலின மக்களை வழிபாடு செய்ய, மற்ற சமூக மக்கள் அனுமதிக்கவில்லை.
கடந்தாண்டு நடந்த அமைதி பேச்சில், கோவில் விழாவை போலீஸ் பாதுகாப்புடன் நடத்த திட்டமிடப்பட்டது.
இருப்பினும், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் வருவதில்லை. இந்த பாகுபாடு காரணமாக பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த முடியாத நிலை உள்ளது.
விசாரணை
எனவே, கோவிலில் வழிபாடு நடத்த சம உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் தேர், எங்கள் பகுதிக்குள் வந்து செல்வதை, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்தரன், ''மனுதாரர்கள் வசிக்கும் தெருக்கள் மிகவும் குறுகலானவை. அப்பகுதியில் தேர் செல்வதில் சிக்கல் உள்ளது,'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, ''கோவில் விவகாரத்தில் அமைதி பேச்சு என்ற பெயரில், அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். கடவுளை வழிபட அனைத்து தரப்பினரையும், எந்த பாரபட்சமும் இன்றி அனுமதிக்க வேண்டும்.
''குறிப்பிட்ட தெருவுக்குள் தேர் செல்ல முடியுமா; சாலையின் அகலம், தேரின் நீள, அகலம் போன்றவை குறித்து ஆய்வு செய்து, பெரம்பலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டார். விசாரணையை, ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.