உடன்பிறப்பே வா..': நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர்
உடன்பிறப்பே வா..': நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர்
உடன்பிறப்பே வா..': நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர்

சட்டசபை தேர்தலுக்கு தயாராக, தொகுதி வாரியாக நிர்வாகிகளை, சென்னை அறிவாலயத்திற்கு வரவழைத்து, முதல்வர் ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து பேசும் நிகழ்வு, இன்று துவங்குகிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஆளுங் கட்சியான தி.மு.க., தரப்பில், தேர்தல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், கடந்த 1ம்தேதி, மதுரையில் நடந்தது. அதில், 'தேர்தலுக்கு தயாராக, கட்சி நிர்வாகிகளை, சட்டசபை தொகுதி வாரியாக சந்திப்பேன்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அடுத்து தி.மு.க., தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'ஓரணியில் தமிழகம்' என்ற திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளர்களில், குறைந்தபட்சம், 30 சதவீதம் பேர், தி.மு.க., உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
உங்கள் செயல்பாடுகளை அறிய, தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பை துவங்க இருக்கிறேன். தொடர்ச்சியான பயணங்களில், உங்கள் ஊருக்கு வரும்போது, உங்களை சந்தித்து மகிழ்வேன்' என, தெரிவித்திருந்தார்.
அக்கடிதத்தின் அடிப்படையில், 'கழக உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், இன்று முதல் 234 சட்டசபை தொகுதிகளின், தி.மு.க., நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.
முதல் நாளான இன்று, சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க., வரலாற்றில், இதுவரை தி.மு.க., தொடர்ந்து இரண்டாவது முறை, ஆட்சி அமைத்தது இல்லை. தன் தலைமையில் சந்தித்த, அனைத்து தேர்தல்களிலும், தொடர் வெற்றியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
எனவே, தொடர்ந்து இரண்டாவது முறையாக, தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில், முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக உள்ளார்.
தமிழகம் முழுதும் தி.மு.க., நிர்வாகிகள், ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக, எந்த பலனும் பெறாமல் அதிருப்தியில் உள்ளனர் என, உளவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக, கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேசி உற்சாகப்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். வரும் சட்டசபை தேர்தலுக்கு புதிய கட்சியாக, விஜய் தலைமையிலான த.வெ.க., உருவெடுத்துள்ளது.
எனவே, தி.மு.க., கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, நிர்வாகிகளிடம் முதல்வர் தனித்தனியாகப் பேசி, அவர்களுக்கு இருக்கும் அதிருப்தியை போக்கி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -