'அப்பா' என்ன செய்கிறார்? முதல்வருக்கு தமிழிசை கேள்வி
'அப்பா' என்ன செய்கிறார்? முதல்வருக்கு தமிழிசை கேள்வி
'அப்பா' என்ன செய்கிறார்? முதல்வருக்கு தமிழிசை கேள்வி
UPDATED : ஜூன் 13, 2025 10:24 AM
ADDED : ஜூன் 13, 2025 05:35 AM

சென்னை: திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., சார்பில், மத்திய பா.ஜ., அரசின் 11 ஆண்டு சாதனை விளக்க கூட்டம், வேலப்பன் சாவடியில் நடந்தது. அதில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் கவர்னர் தமிழிசை கூறியதாவது:
உலக அரங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ரயில் பாலம் காஷ்மீரில் கட்டப்பட்டுள்ளது. பெண்கள் வேலைவாய்ப்பு 7.50 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் உட்கட்டமைப்பிற்கு இதுவரை 10 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது.
தமிழுக்கு எப்போதெல்லாம் மகுடம் சூட்ட முடியுமோ அப்போதெல்லாம் பிரதமர் மகுடம் சூட்டி வருகிறார். ஆனால், கீழடியின் தொன்மையை மறைக்க பா.ஜ., முயற்சி செய்வது போல் ஒரு பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ், கம்யூ., தி.மு.க., கூறி வருகின்றன.
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின்தான், கீழடியின் தொன்மை குறித்த அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சி அதை கிடப்பில் போட்டது. மேலும், மாநில அகழ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் தர, பா.ஜ., ஆட்சியில் 66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழின் தொன்மையை வெளிப்படுத்த தி.மு.க., அரசு எத்தனை அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது?
ஜாதி சான்றிதழ்களில் ஜாதி பெயருக்கு முன்னால் 'ஹிந்து' என்ற பெயரை நீக்குவதாக செய்தி வருகிறது. ஹிந்து என்ற வார்த்தையை மட்டும் நீக்க என்ன காரணம்? இதனால், அரசியலமைப்பு சட்டப்படி இட ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்படும்.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 'தப்பு தப்பா நடக்குது; அப்பா என்னும் ஸ்டாலின் என்ன செய்கிறார்?
இவ்வாறு அவர் கூறினார்.