படிப்படியாக குறைகிறது பயணியர் எண்ணிக்கை; பறிகொடுத்து தவிக்கிறது சென்னை ஏர்போர்ட்
படிப்படியாக குறைகிறது பயணியர் எண்ணிக்கை; பறிகொடுத்து தவிக்கிறது சென்னை ஏர்போர்ட்
படிப்படியாக குறைகிறது பயணியர் எண்ணிக்கை; பறிகொடுத்து தவிக்கிறது சென்னை ஏர்போர்ட்

சென்னை மற்றும் மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் இடையேயான விமான போக்குவரத்தில், பயணியர் எண்ணிக்கை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, 60க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு, 30க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன. கொரோனாவுக்கு பின், சென்னை விமான நிலையம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் பெறவில்லை. குறிப்பாக உள்கட்டமைப்பு, பயணியர் கையாள்வதில் அலட்சியம் போன்ற காரணங்களால் பயணியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று மலேஷியா. அதன் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் தினமும் தமிழகம் வருகின்றனர். இப்படி வருவோருக்கு, சென்னை மற்றும் திருச்சி நுழைவாயிலாக உள்ளன.
சென்னையில் இருந்து மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு, 'ஏர் ஏசியா' நிறுவனம் - 2, 'மலேஷியன் ஏர்லைன்ஸ்' - 2, 'இண்டிகோ' - 1 என, தினசரி விமானங்களை இயக்குகின்றன. இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கு எப்போதும் தேவை அதிகம்; 90 சதவீத இருக்கைகள் நிரம்பி விடும்.
இந்நிலையில், சென்னை - மலேஷியா பயணியர் போக்குவரத்து எண்ணிக்கை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டின் முதல் காலாண்டில், 1.72 லட்சமாக இருந்த பயணியர் எண்ணிக்கை, நடப்பு காலாண்டில், 1.28 லட்சமாக குறைந்துள்ளது. கூடுதல் விமானங்களை இயக்கினால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படலாம் என்கின்றனர், 'ஏவியேஷன்' வல்லுநர்கள்.
இதுகுறித்து, விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறியதாவது:
சென்னை - கோலாலம்பூர் இடையேயான விமான சேவை குறைந்து வருகிறது. பொதுவாக, சர்வதேச விமான போக்குவரத்தை பொறுத்தவரை, இரு நாடுகளுக்கு இடையே, 'பாசா' எனப்படும் விமான போக்குவரத்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதில் பயணியர் எண்ணிக்கை, சேவைகள், அனுமதிக்கப்பட்ட இருக்கைகள் விபரங்கள் இடம்பெறும்.
இந்தியா - மலேஷியாவுக்கான விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில், அந்நாட்டு தரப்பிலான நடவடிக்கைகள் முழுமை பெற்று விட்டன. அதாவது, அந்நாட்டு விமான நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து கூடுதலாக விமானங்களை இயக்க முடியாது. இந்திய விமான நிறுவனங்கள் தான் இயக்க முடியும்.
சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு, 'இண்டிகோ' நிறுவனம் மட்டுமே விமானம் இயக்குகிறது. ஒப்பந்தத்தில் இடம் இருந்தும், மற்ற எந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டவில்லை.
முன்பு இந்தோனேஷியாவை சேர்ந்த, 'பத்திக் ஏர் இந்தோனேஷியா' விமான நிறுவனம், சென்னை - கோலாலம்பூர் - பாலி மற்றும் மேதா ஆகிய நகரங்களுக்கு தினசரி சேவை வழங்கியது. இதனால், பயணியர் எளிதாக மலேஷியா செல்ல முடிந்தது. அந்த சேவைகளும் திடீரென நிறுத்தப்பட்டன.
இதற்கான காரணங்களை, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சொல்லவில்லை. மீண்டும் இயக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சென்னை விமான நிலையத்தில், ஏற்கனவே நிறைய சேவைகளை இழந்து நிற்கிறோம். தேவையுள்ள மலேஷியா சேவையும் சரிவை சந்தித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அமைச்சகம் தலையிட்டு முயற்சிகள் எடுத்தால் மட்டுமே, இனி போக்குவரத்து அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -